நான் பார்த்து வியந்த நடிகர் இந்திரன்ஸ்! - சூர்யா | Suriya | Indrans | Karuppu
திருவனந்தபுரத்தில் நடந்த ‘கருப்பு’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் சூர்யா, கேரள ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து, நடிகர் இந்திரன்ஸை பாராட்டினார். குழந்தை போல அப்பாவித்தனமும், எந்த காட்சியிலும் தனித்து தெரியும் ஆற்றலும் அவருக்கு உள்ளதாக கூறினார். தேசிய விருது பெற்ற நடிகராக தொடர்ந்து தன்னை புதுப்பிக்கும் இந்திரன்ஸை பார்த்து வியந்ததாக சூர்யா உணர்ச்சியுடன் பகிர்ந்தார்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் Pre-Release நிகழ்வு நேற்று கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சூர்யா "நான் அவ்வளவு தூரம் தள்ளி சென்னையில் இருக்கிறேன். இங்கு வருடத்துக்கு ஒருமுறை தான் வருகிறேன். ஆனால் உங்களின் அன்பு கொஞ்சம் கூட குறைவதே இல்லை. அதற்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே நன்றி. இதில் நான் வியந்து பார்த்த ஒரு நடிகர் இந்திரன்ஸ் சார். அவரிடம் இன்னும் ஒரு குழந்தையின் அப்பாவித்தனம் இருக்கிறது. இவ்வளவு படங்கள் நடித்த பெரிய நடிகர். ஆனால் எனக்கு கேரவன் இருக்கிறதா, குடை கொடுத்தார்களா, சாப்பாடு வந்ததா என எதையுமே பார்க்கமாட்டார். ஒரு காட்சியில் வந்து நடித்தார் என்றால் யாராலும் அவரை வெல்ல முடியாது. அவருக்கு பெரிய ஆற்றல் இருக்கிறது. எந்த சீன் கொடுத்தாலும், எத்தனை டேக் என்றாலும் நம்மை ஆச்சர்யப்படுத்துவார். 200 பேருடன் இணைந்து நடிக்கும் காட்சியிலும் தனித்து தெரிவார். எங்கிருந்து அவருக்கு அவ்வளவு ஆற்றல் வருகிறது என தெரியவில்லை. நானும் அவரும் சேர்ந்து தான் தேசிய விருது வாங்கினோம். ஒரு நடிகராக அவர் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
ஆர் ஜே பாலாஜி பல வேலைகளை செய்தாலும், ஒவ்வொன்றிலும் தன்னுடைய சிறப்பை கொடுத்திருக்கிறார். நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் முக்கியமான படமாக நினைக்கிறேன். நான்கு ஐந்து ஆண்டுகள் முன்னால் நான் செய்த படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் வித்தியாசம் இருக்கும். முதல் பாதி எமோஷனல் கோர்ட் ரூம் ட்ராமா, இரண்டாம் பாதியில் நிறைய தியேட்டர் மொமண்ட்ஸ் இருக்கும்." என்றார்.

