"என்னை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட் படம் எடுப்பாங்களா.." - ஆர்யா | Arya | Mr X
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் `மிஸ்டர் எக்ஸ்'. ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆர்யா பேசியபோது, "கதை கேட்கும்போதே இது மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கும் எனத் தோன்றியது. நம்மை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த தயாரிப்பாளராவது படம் எடுப்பாரா என சந்தேகத்துடன்தான் இந்தப் படத்துக்கு நான் ஓகே சொன்னேன். ஆனால் எங்களை நம்பி, படத்தின் கதையை நம்பி எங்களுக்கு பக்கபலமாக இருந்து ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது தயாரிப்பாளர் லஷ்மன்தான்.
இயக்குநர் மனு ஒரு கடின உழைப்பாளி. அவரை ’மிஸ்டர் பர்ஃபெக்ட்’ என்று சொல்லலாம். இதன் கதையில் அவர் கடினமாக உழைத்து உள்ளார். இந்தப் படத்துக்காக மூன்று வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்திருக்கின்றோம்.. ஆனால் ஒருநாள்கூட, அவர் முகம் சுளித்து கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. படத்தின் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர். நாங்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தச் சென்றபோதுகூட அந்த நாட்டு மக்களுடன் சென்று சகஜமாக அவர் பழகுவார்.
எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில்தான் நான் நடித்திருப்பேன். கௌதம் நடித்துள்ள அந்த கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம். நீங்கள் படம் பார்த்துபிறகு கௌதமைதான் நிச்சயம் அனைவரும் புகழ்வார்கள். புதுமையாகவும் ரசிக்கும்படியாகவும் நடித்துள்ளார் கௌதம். சரத்குமார் சாருடன் எனக்கு முதல் காட்சியே ராஜஸ்தானில்தான் படமாக்கப்பட்டது. ஏப்ரல், மே மாத வெயிலிலும் அதைப் பெரிதுபடுத்தாது ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். இந்தப் படத்துக்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்.
மஞ்சு வாரியரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தபோது நான் ரொம்ப சந்தோஷம் அடைந்து விட்டேன். அவரிடம் சென்று, ’நாம் ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா’ என்று கூட கேட்டேன். மஞ்சு வாரியரின் நடிப்பு நம் அனைவருக்கும் தெரியும். அவ்வளவு அழகாக சிறப்பாக நடித்துள்ளார். அனாகா ஆயிரம் கேள்வி கேட்பார். ’ரொமான்டிக் பாடலில் சிரியுங்கள்’ என்று சொன்னால், ’என் கேரக்டர் சிரிக்காதே... சீரியஸாகத்தானே இருக்கும்’ என்று சொல்வார். நம்மையே இவ்வளவு கேள்வி கேட்கிறார், நாம் சரியாகத்தான் பண்ணுகிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்தார். அதுல்யா மற்றும் ரைஸா இருவருக்குள்ளேயும் படத்திற்குள் ஒரு போட்டி இருக்கிறது. மிஸ்டர் எக்ஸ் திரையரங்குக்கு வருபவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்" என்றார்.

