"தெறி, மெர்சல், பிகில் படங்கள் பற்றி பேசுகிறார்கள்; ஆனால்.." - ஏக்கத்தைப் பகிர்ந்த அட்லீ | Atlee
அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ஃபகத் பாசில், ராம்கி, தமன் எனப் பலரும் நடித்துள்ள படம் `இதயம் முரளி'. இப்படம் ஜூலை 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் அட்லீ, "சென்னைக்கு வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. கடைசியாக வாக்களிக்க வந்தேன். ஆகாஷ் என்னுடைய தம்பி மாதிரி. தம்பியேதான். அவனுக்கு No சொல்ல என்னால் முடியாது, நிறைய உதவிகள் செய்திருக்கிறான். சின்ன வயது என்றாலும், மிகவும் பொறுப்பான பையன். ரொம்ப நாட்களாக ஒரு கதையை வைத்துச் சுற்றிக்கொண்டிருந்தான். ’நான் தயாரிக்கிறேன்’ என்று சொன்னேன். ஆனால், என்ன யோசித்தான் என தெரியவில்லை, ’உங்களைவிட நான் சிறப்பாக தயாரிப்பேன்’ என அவனே தயாரித்துக் கொண்டான்.
படம் முடிந்த பின்னால், எனக்குப் போட்டு காண்பித்தான். படம் மிகவும் எனக்குப் பிடித்திருந்தது. ’ராஜா ராணி’ படத்துக்குப் பின் ஒரு நல்ல காதல் கதை என்னால் பண்ண முடியவில்லையே என என் மனதில் ஒரு சின்ன குறை இருந்துவந்தது. நான் எங்குப் போனாலும் பலரும் என்னிடம் சொல்வது ’ராஜா ராணி’ படம் பற்றிதான். பின்னர் தளபதியினால் ’தெறி’, ’மெர்சல்’, ’பிகில்’ படங்கள் பற்றி பேசுகிறார்கள். ஒரு காதல் கதை செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எப்போதுமே இருக்கும். எனவே, ஒரு காதல் கதையைத் தயாரிப்போம் என முயற்சி செய்தேன்.
ஆகாஷ் படம் போட்டுக் காண்பித்ததும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட ஆகாஷின் பயோபிக்தான் இது. அவரைத் தெரிந்தவர்களுக்கு இது புரியும். இந்தப் படத்தில் வரும் ஃபஹத் பாசில்தான் நான். அவர் சொல்வதை எல்லாம் நான் கேட்பேன். அதர்வாவின் ரசிகன் நான். அவருக்கு ஒரு சிறப்பான படம் கிடைக்க வேண்டும் என நான் காத்திருக்கிறேன். இந்தப் படம் உங்களுக்குப் பெரிய வெற்றியாக அமையும் என நம்புகிறேன்.
ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பும், நடனமும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் என்னுடைய படத்தில் நடிக்க அழைத்தேன், ’ஆகாஷ் படத்தில் நடிப்பதால், என் படத்தில் நடிக்க முடியாது’ எனச் சொல்லிவிட்டார்கள். கயாடு லோஹர் சீக்கிரமே ஒரு நேஷனல் க்ரஷ் ஆக அமர்வார். இந்தப் படத்தில் நீங்கள் அற்புதமான வேலை செய்திருக்கிறீர்கள். ’உள்ளம் கேட்குமே’ படத்தில் ஜீவா சார் - ஹாரீஸ் இணைந்து ஒரு மேஜிக் செய்வார்கள். அப்படியான மேஜிக் தமனும் ஆகாஷும் இணைந்து செய்திருக்கிறார்கள். இது அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும்" என்றார்.

