"படம் எடுக்காம பாதில ஓடிருவாங்கனு பயந்தேன்!" - ஜி.வி. பிரகாஷ்குமார் கலகல | G V Prakash | Happy Raj
ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `ஹேப்பி ராஜ்'. இதில் ஸ்ரீ கௌரிப் ப்ரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியம் எனப் பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் பேசியபோது, "மரியா எதற்கும் பயப்படாத நபராக இருக்கிறான். திடீரென மெசேஜ் அனுப்பினான், நானும் சாட் ஜிபிடிபோல உடனே பதில் அனுப்பி, கதை கேட்டு, நடித்து முடித்துவிட்டேன். இப்படியான ஒரு படத்தை எடுத்துக் கொடுப்பார்கள் என்றால், அவர்களுக்கு நான் சாட் ஜிபிடி ஆக இருக்க விரும்புகிறேன். `த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் ஒரு எனர்ஜி இருந்தாலும், ஏ சான்றிதழுக்கான விஷயங்களும் இருக்கும். ஆனால் அந்த எனர்ஜியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதற்குள் ஃபேமிலி விஷயங்களைச் சேர்த்து `ஹேப்பி ராஜ்' கொடுத்திருக்கிறார்.
இந்தக் கதை கேட்டு பிடித்துவிட்டாலும் தயாரிப்பாளர்கள் அமையாமல் இருந்தார்கள். அப்போது வந்தவர்கள்தான் ஜெய்காந்த் - ஜெய்வர்தா. ஆனால் எனக்கு ஒரு பயம், என்னவென்றால், புது தயாரிப்பாளர்கள் புது இயக்குநர். பாதியில் படம் எடுக்காமல் ஓடிவிடுவார்களோ என்று பயந்தேன். அவர்களிடமே கூட கேட்டேன், ஆனால் அவர்கள் அருமையாக எடுத்து முடித்து வியாபாரம் எல்லாமே முடித்துவிட்டார்கள். `மெண்டல் மனதில்' நடிப்பதற்கு இடையே இருந்த கேப்பில்தான் இந்த படத்தில் நடித்தேன். ஆனால் அவர்கள் அந்தப் படத்திற்கு முன் எடுத்து ரிலீசுக்கே வந்துவிட்டார்கள்.
இந்தப் படத்தில் அப்பாஸ் சார் நடித்திருக்கிறார். இது யாருக்கு கம்பேக் ஆக இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு கம்பேக் ஆக அமைய வேண்டும். அவர் மிக அருமையான மனிதர். மரியம் ஜார்ஜ் சார், கௌரி, பிரார்த்தனா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படத்தின் உதவி இயக்குநர்கள் எல்லோருக்கும் நன்றி. அவர்கள் எல்லோரும் இயக்குநர்கள். படத்தில் நிறைய செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் மரியாவையும் சேர்த்துதான் சொல்கிறேன். அடுத்த படத்தில் ஹீரோ ஆகிவிடுவான்போல. நான் உனக்கு சாட் ஜிபிடி ரிப்ளே செய்தேன், நீ எனக்கு ரிப்ளே செய்கிறாயா எனப் பார்ப்போம். இந்தப் படம் உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், உங்கள் தந்தையை நினைக்க வைக்கும்" என்றார்.

