’விஜய் சாருக்கு எழுதிய கதை.. அவர் கேட்ட கேள்வி’ - அஷ்வத் சொன்ன சம்பவம்!
விஜய் சாருக்கு என பெரிய கதை செய்து வைத்திருக்கிறேன். அவருடன் பணியாற்றுவது தான் என்னுடைய கனவு. அவரை முதல்முதலில் நேரில் பார்த்தபோது கண்ணீர் தான் வந்தது, பேச்சுவரவில்லை. அவரை எனக்கு அவ்வளவு பிடிக்கும், அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார் என்பது எனக்கு பெரிய ஏமாற்றம் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசினார்.
`ஓ மை கடவுளே', `டிராகன்' போன்ற படங்கள் மூலம் கவனம் குவித்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து சிம்பு நடிப்பில் படம் இயக்க உள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் உடன் பணியாற்ற வேண்டும் என்பது தன் கனவு என்பதையும், அவருடனான சந்திப்பு குறித்தும் பகிர்ந்திருந்தார்.
அதில் அவர் பேசிய போது "விஜய் சாருக்கு என பெரிய கதை செய்து வைத்திருக்கிறேன். அவருடன் பணியாற்றுவது தான் என்னுடைய கனவு. வழக்கமாக எனக்கு எமோஷனல் ஆவதெல்லாம் நடக்காது. ஆனால் விஜய் சார் படம் (டிராகன்) பார்த்துவிட்டு வாழ்த்து சொல்ல அழைத்தார். உடன் அர்ச்சனா, பிரதீப் கூட இருந்தார்கள். வழக்கமாக நிறைய பேசும் நான் மிக அமைதியாக இருந்தேன். நான் விஜய் சாரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். நமக்கு ரொம்ப பிடித்தவர் நம் எதிரில் இருக்கிறார், என்னால் பேசவே முடியவில்லை. கண்ணீர் மட்டுமே வந்தது.
எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். ஆனால் பணியாற்ற வாய்ப்பில்லை என்பது வருத்தமாக இருந்தது. சில முறை அது மிஸ் ஆனது. இவன் தான் நமக்கு சரியான ஆள் என அவருக்கு தோன்றி இருக்கிறது. `எப்படி அர்ச்சனா இவனை விட்டீங்க, ஏன் கூட்டிட்டு வரவில்லை?' என்றார். என்னுடைய கனவு தொடும் தூரத்திலிருந்து இருந்தும் மிஸ் ஆனது. ரஜினி சாருக்கு கதை சொன்னேன், அந்தப் படம் நடக்குது நடக்கவில்லை என்பதை தாண்டி அது என்னுடைய ஒரு கனவு. கமல் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பதும் கனவு. அப்படி விஜய் சாரை இயக்க வேண்டும் என்பதும் கனவு. சார் ஒரு கதை இருக்கு என சொல்ல முடியவில்லை. அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார் என்பது எனக்கு பெரிய ஏமாற்றம்" என்றார்.

