Sathyaraj shares Amaidhipadai Memories
SathyarajAmaidhipadai

பாராட்டிய சிவாஜி, ரஜினி, விஜய்... கோபித்த விஜயகாந்த்! - ’அமைதிப்படை’ நினைவுகள் பகிர்ந்த சத்யராஜ்!

விஜய்யிடம் உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் எனக் கேட்கும்போது, `எனக்கு யாரும் இன்ஸ்பிரேஷன் இல்லை. சில சமயம் வசனங்களை நான் சத்யராஜ் மாதிரி சொல்லிப் பார்ப்பேன். அவருடைய ’அமைதிப்படை’ அமாவாசை மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஆசை' என கூறினார்.
Published on

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து 1994இல் வெளியான படம் `அமைதிப்படை'. இப்படம் இப்போது ஏப்ரல் 10ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சத்யராஜ்,  "நான் 75 படங்களில் வில்லனாக நடித்துவிட்டு ஹீரோ ஆனேன். ஹீரோ ஆனதும் `கடலோரக் கவிதைகள்', `பாலைவன ரோஜாக்கள்' என தொடர்ச்சியாக ஹிட் படங்கள். உச்சத்துக்கு வந்தது `வால்டர் வெற்றிவேல்'. அது 200 நாட்கள் ஓடியது. அதன் பின்னர் `உடன்பிறப்பே' படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மணிவண்ணன் சார் எனக்கு இந்தக் கதையை கூறினார். உடனே நான் `தலைவரே ரொம்ப கஷ்டப்பட்டு ஹீரோ ஆகியிருக்கிறேன், நீங்கள்தான் வாழ்க்கை கொடுத்தீர்கள். மறுபடி, அந்த வில்லன் சத்தியராஜை நினைவுபடுத்த வேண்டுமா?’ என்றேன்.

’நீங்கள் கதையைக் கேளுங்கள்’ எனக் கூறி முழுக்கதையும் சொன்னார். அதைக் கேட்டபோது எலெக்ஷன் காட்சியில் சேரில் மெல்லமெல்ல முழுவதும் அமர்வது பற்றிச் சொன்னதும், ’ஓகே.. இந்தப் படத்தைச் செய்கிறேன்’ எனக் கூறினேன். இந்தப் படமும் 200 நாட்கள் ஓடியது. மணிவண்ணன் என்றாலே வேகமாக படத்தை எடுப்பார்.  எந்தப் படத்தையும் 30 நாட்களுக்கு மேல் எடுக்கவே மாட்டார். `நூறாவது நாள்' என்ற ஒரு படத்தை 18 நாட்களில் எடுத்தோம். ஆனால், இந்தப் படத்தை 70 நாட்கள் எடுத்தோம். ஹீரோ சத்யராஜ், வில்லன் சத்யராஜை பார்க்க வர ஒரு சாதிக் கலவரம் நடக்கும். அந்தக் காட்சியை பேருக்கு எடுத்தால் போதும், ஆனால் அதனை 12 நாட்கள் எடுத்தார். ’சொந்தப் படம் எடுக்கிறீர்கள்; எதற்கு இவ்வளவு செலவு’ என்று கேட்டேன். `இல்ல தலைவரே இந்தப் படத்தை அறிவித்ததும் கண்ணாபின்னாவென விலைக்கு விற்றுவிட்டோம். 30 நாள், 40 நாட்களில் எடுத்தால் தப்பாக நினைப்பார்கள், அதற்காகத்தான்" என்றார். ’இதுக்காக யாராவது 70 நாள் எடுப்பார்களா?’

இப்படி, பல பசுமையான நினைவுகள். இந்தப் படத்துக்கான ஷூட்டிங் விடிய விடிய நடக்கும். அப்போது பொள்ளாச்சியில் ஒரே லாட்ஜில் விஜயகாந்த் சார், கார்த்தி, பிரபு, நான் என எல்லோரும் தங்கி இருப்போம். நான்கு பேர் பட ஷூட்டிங்கும் ஒன்றாக நடக்கும். அப்படி எடுத்த படம் இது.

Sathyaraj shares Amaidhipadai Memories
கலகலப்பான காதல் படமாக இருக்கிறதா `ஹேப்பி ராஜ்'? | Happy Raj | G V Prakash Kumar

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜி சார் என் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார். ரொம்ப நேரம் கழித்து `நீ நல்லா நடிச்சிருக்கடா' என்றார்.

ஒரு கட்டத்தில் ஹீரோவாக எனக்குப் பெரிய இறங்குமுகம். வரிசையாக என் படங்கள் தோல்வியடைந்தன. அப்போது விஜயிடம் பேட்டி எடுக்கிறார்கள். ’உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன்’ எனக் கேட்கும்போது `எனக்கு யாரும் இன்ஸ்பிரேஷன் இல்லை. சில சமயம் வசனங்களை நான் சத்யராஜ் மாதிரி சொல்லிப் பார்ப்பேன். அவருடைய ’அமைதிப்படை’ அமாவாசை மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஆசை' என கூறினார். நான் அவருக்கு போன் பண்ணி நன்றி சொன்னேன்.

Sathyaraj
SathyarajAmaidhipadai

ரஜினி சார் அவரே போன் செய்து, ’அமைதிப்படை நல்லாருக்குனு சொல்றாங்களே, எனக்குப் போட்டுக் காட்ட முடியுமா?' என்றார். அடுத்த ரெண்டு மணிநேரத்தில் அவருக்கு படம் போட்டோம். ’ரொம்ப போல்டா எடுத்திருக்கீங்க, எடுக்கும்போது டென்ஷனா இல்லையா?’ என்று கேட்டார். `எடுத்துட்டோம் சார், கேட்டா நானும் மணியும் மாறிமாறி பழி போட்டுக்குவோம்' என்றேன்.

எல்லா நடிகர்களும் பாராட்டினார்கள். ஆனால் விஜயகாந்த் மட்டும், `நீங்க ஹீரோவா வளைந்த பின்னால, ஏன் வில்லனா ஞாபகப்படுத்தினீங்க?' என கோபித்துக் கொண்டார். `இல்ல விஜி, இந்தப் படம் காலம் கடந்தும் நிக்கும்' என்றேன். அதேபோல நின்றுவிட்டது.

’அமைதிப்படை’ என்பது ஒரு கல்ட் படம். இன்றைய சூழலில் இப்படியான படம் சாத்தியமே இல்லை. பல காட்சிகளை அனுமதிக்கவே மாட்டார்கள். ஏற்கெனவே எடுத்த படம் என்பதால், இப்போது ரிலீஸ் செய்ய முடிகிறது. அமைதிப்படைக்கு என ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே இந்தப் படத்துக்கு நல்ல ஓப்பனிங் இருக்கும் என நம்புகிறேன்." என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com