”நான் ’Dhurandhar 2’ படத்தை பார்த்துவிட்டேன்!” - நடிகை யாமி கௌதம் | Yami Gautam
பிரபல பாலிவுட் நடிகை யாமி கௌதம். தமிழில் `கௌரவம்' மற்றும் `தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படங்களில் நடித்தார். இப்போது `A Thursday', `Lost', `Article 370', `Haq' போன்ற பெண் மைய கதைகளைக் கொண்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் இயக்குநர் ஆதித்யா தர்-க்கும் 2021ஆம் ஆண்டு திருமணம் ஆனது. சமீபத்தில் யாமி கௌதம் கலந்து கொண்ட ஓர் உரையாடலில் அவரது கணவர் இயக்கியுள்ள `Dhurandhar' படம் பற்றி கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் சொன்ன யாமி, "என் கணவர் Uri போன்ற சில அற்புதமான படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் Dhurandhar வந்தது. Dhurandhar போன்ற ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எப்போதும் இருந்தது. இல்லையெனில், அது சாத்தியமில்லை. எனக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை இருந்தது, Dhurandhar ஒவ்வோர் இந்தியரையும் பெருமைப்படுத்தும் படமாக இருக்கும். இதை நான் முன்பேகூட கூறியிருந்தேன். Dhurandhar படத்தின் ஸ்கிரிப்டை முதன்முதலில் படித்தபோது நான் Article 370 படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது அது வெறும் 40 பக்கங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், என் கண்கள் நீர்த்துப்போயின. இந்தப் படத்தை உருவாக்க நேர்மையுடனும், நம்பிக்கையுடனும் அவர் எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பது எனக்குத் தெரியும்.
நான் ஏற்கெனவே Dhurandhar 2 படத்தைப் பார்த்துவிட்டேன். அது அசாதாரணமானது என்பதையும் தாண்டியதாக இருக்கிறது. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அன்று விமானத்துக்கு நேரமாகிட்டது என்பதால் ஆதித்யாவிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் பின்னர், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு ஸ்கிரிப்டைப் படிக்க வேண்டியிருந்தது, ஆனால் என்னால் முடியவில்லை, நான் எதையாவது பார்க்கலாம் என நினைத்தேன், அதுவும் என்னால் முடியவில்லை.
வெளியே அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டே, விமானம் தரையிறங்கும்போது ஆதித்யாவிடம் என்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நான் படத்தில் அனுபவித்ததைப் பற்றிய எனது உணர்வுகளை நியாயமான முறையில் வெளிப்படுத்த விரும்பினேன். ஆதித்யா தனது ரசிகர்களையும் நாட்டையும் நேசிக்கிறார், இந்தப் படத்தை உருவாக்க தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளார். ’Dhurandhar 2’ ரசிகர்களால் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும்" என்றார்.

