"எதனால் இப்படி நடக்கின்றது.. எனக்கு புரியவில்லை" - ரைசா வில்சன் | Raiza Wilson | Nova
‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் கவனம் பெற்ற ரைசா வில்சன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள படம் ‘நோவா’; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இதில் துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஸ்வாதிகா மற்றும் கிருஷ்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அறிமுக இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ரைசா வில்சன் கூறும்போது, “ஒரு கதைக்குள் இன்னொரு கதை என்கிற விதமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நான் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறேன். ஆக்சன், த்ரில்லர், சயின்ஸ் பிக்சன் கலந்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதுவரை நான் இந்த மாதிரி கதையில், கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அதனாலேயே இந்தக் கதை எனக்குப் பிடித்துவிட்டது. நான் நடித்த ஆக்சன் காட்சிகளுக்காக விமல் ராம்போ மாஸ்டர் பிரத்யேகமான பயிற்சி அளித்தார். அது மட்டுமல்ல, நான் ஏற்கெனவே `மிஸ்டர் எக்ஸ்' படத்திற்காக சண்டைக் காட்சிகளில் பயிற்சியெடுத்து கொஞ்சம் பழகி இருந்தேன். அதனால் `நோவா' படத்தில் நடிக்கும்போது அது எளிதாக இருந்தது. ஆர்யாவுடன் இணைந்து நான் நடித்துள்ள `மிஸ்டர் எக்ஸ்' படம் வெளியாகி எனக்கு நல்ல பெயரைத் தேடித் தந்துள்ளது.
`பியார் பிரேமா காதல்' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நிறைய படங்கள் ஒப்பந்தமானேன். அதில் சில படங்கள் படப்பிடிப்பு முடிந்தும்விட்டன ஜி.வி பிரகாஷுடன் `காதலிக்க யாருமில்லை' என்கிற படத்தில் நடித்தேன். 95 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. 2019-இல் ஆரம்பித்த அந்தப் படம் இன்னும் ஏன் ரிலீஸ் ஆகவில்லை எனத் தெரியவில்லை. எதனால் இப்படி நடக்கின்றது என்றும் எனக்குப் புரியவில்லை.
அதனாலேயே ஓர் இடைவெளி விழுந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இதேபோலத்தான் `சேஸ்' என்கிற படமும் ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது. அதேசமயம், `மிஸ்டர் எக்ஸ்' வெளியாகிவிட்டது. தற்போது `நோவா' வெளியாக உள்ளது. இப்படி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும்போது நிச்சயமாக எனக்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார் ரைசா வில்சன்.

