`மீசைய முறுக்கு 2'... ஆதி கொடுத்த அப்டேட்! | Meesaya Murukku 2 | Hiphop Tamizha Adhi
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி,. ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகி 2017ல் வெளியான படம் `மீசைய முறுக்கு'. இப்படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். இந்நிலையில் நேற்று மலேசியாவில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழா கான்செர்ட்டில் அடுத்ததாக `மீசைய முறுக்கு 2' படத்தை இயக்கி நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஆதி.
இப்படம் பற்றி அறிவித்த அவர் "`மீசைய முறுக்கு 1', ஆதி - ஜீவா என்ற இரு நண்பர்களை பற்றிய கதை. `மீசைய முறுக்கு 2'வும் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட, இரு நண்பர்களை பற்றிய படம்தான். அந்த இருவரில் ஒருவராக நான் நடிக்கிறேன், இன்னொரு பாத்திரம் யார் என்றால், அவர் உண்மையிலேயே எனக்கு நண்பர், உண்மையிலேயே எனக்கு தம்பி. நடிக்கிறாயா என விளையாட்டாக கேட்டேன், உடனே சரி எனக் கூறினார், ஹர்ஷத்கான் தான் அது" என்றார்.
அடுத்ததாக பேசிய ஹர்ஷத்கான் "அண்ணன் இது மலேசியா கான்செர்ட் என சொன்னார், ஆனால் வந்து பார்த்தால் தான் தெரிகிறது மலேசியா மாநாடு போல இருக்கிறது. இங்கு காதல் செய்யாதவர்கள் இருக்கிறீர்களா என்று கேட்டால் கூட ஆள் இருப்பார்கள், ஆனால் `மீசைய முறுக்கு' பார்க்காதவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டால் யாருமே இருக்க மாட்டார்கள். அப்படி உங்களில் ஒருவனாக இருந்து நானும் `மீசைய முறுக்கு' பார்த்தேன். இப்போது உங்களால் மீசையை முறுக்கு 2 படத்தில் அண்ணனுடன் நடிக்கிறேன்" என்றார்.

