விஜயதசமியில் ஒருபக்கம் புதிய தொழில்... இன்னொருபக்கம் நயன்தாரா 75 Glimpse Video!

நயன்தாராவின் 75 ஆவது திரைப்படத்தின் Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நயன்தாரா
நயன்தாராpt web

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திரை வாழ்வில் தனது 75 ஆவது திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக, பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும் அறம் போன்ற தரமான படங்களில் நடித்து தனது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நியாயம் சேர்த்தவர் நயன்.

அவரது 75 ஆவது திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5.40 க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து க்ளிம்ப்ஸ் இரவு 7.02 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

அதன்படி 7:02-க்கு ஜீ ஸ்டூடியோஸ் தனது யூ டியூப் தளத்தில் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. படத்திற்கு அன்னப்பூரணி என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி போன்றோர் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்தவர். அன்னபூரணி தலைப்பிற்கு உப தலைப்பாக The Goddess of Taste என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து பல்வேறு விருதுகளை வாங்கி, திரை வாழ்வைத்தாண்டி தனது சொந்த வாழ்விலும் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த நயன்தாரா தனது 75 ஆவது படத்திலும் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஆண்களால் ஆளப்படும் சினிமா உலகில் கதாநாயகிகளின் காலம் என்பது மிகக்குறைவு என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் நயன்தாரா இதில் விதிவிலக்கானவர். ஏனெனில் அவர் லேடி சூப்பர்ஸ்டார்.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக கலக்கிவரும் நயன்தாரா மற்றொரு பக்கம் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பிசினஸிலும் ஜொலித்து வருகிறார். 9Skin, The Lip Balm Company போன்றவற்றை ஏற்கெனவே வெற்றிகரமாக நடத்திவரும் நடிகை நயன்தாரா, FEMI9 எனும் சானிட்டரி நாப்கின் பிராண்ட் பிசினஸை இன்று தொடங்கியுள்ளார்.

“இது, ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியைக் கொண்டாட என்னுடன் இணையுங்கள்! ஒருவரையொருவர் ஆதரிப்போம், இணைந்து உயர்வோம்” என இன்ஸ்டாவில் ஆதரவும் கோரியுள்ளார் நயன்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com