"நான் தான் ஹீரோ என சொல்லி இயக்குநர் ஏமாற்றிவிட்டார்.." - விஜய் சேதுபதி கலகல | Vijay Sethupathi
விஜய் சேதுபதி, காந்தி டாக்ஸ் படத்தில் நடித்ததற்கான அனுபவத்தை பகிர்ந்து, மௌனப்படத்தில் பாடல்களை சேர்க்க ரஹ்மான் சார் முக்கிய காரணம் என தெரிவித்தார். படம் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக பாடல்கள் சேர்க்கப்பட்டன. ரஹ்மான் சார் 95% உழைத்தார் என பாராட்டினார்.
விஜய் சேதுபதி, அர்விந்த் சுவாமி, அதிதிராவ் ஹைதரி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் `காந்தி டாக்ஸ்'. மௌனப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்றது. படம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் விஜய் சேதுபதி.
அவர் பேசும் போது "பேசும் படத்துடன் இதனை ஒப்பிடவே மாட்டேன், அது மிகச்சிறந்த படம். இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்த கிஷோருக்கு நன்றி" என்றார்.
எதனால் இப்படத்தில் நடிக்க சம்மதித்தீர்கள் என்றதும், "சைலன்ட் படம், வித்தியாசமான படம் என்பதற்காக மட்டும் ஒரு படத்தை செய்ய முடியாது. அந்தக் கதை போகும் போக்கும், அது பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. நான் பயந்து கொண்டே தான் ஒப்புக் கொண்டேன். எதாவது ஒரு இடத்தில் இங்கு பேசியே நடிக்கலாமே, ஏன் பேசாமல் இருக்கிறார்கள் என தோன்றிவிடக்கூடாது. ஆனால் இது எப்போதாவது அமையும் வாய்ப்பு, ஒரு நடிகனாக அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தோன்றியது. அதுதான் இதனை தேர்வு செய்யக் காரணம்" என்றார்.
மௌனப்படத்தில் எதற்காக பாடல்கள் என்று கேட்க "ரஹ்மான் சார் இந்தப் படத்தில் இருக்கவும், பாடல்கள் வைக்கவும் காரணம் படம் மக்களுக்கு சென்று சேர வேண்டும். மும்பையில் இப்படத்துக்காக நடந்த நிகழ்வில், படத்திலிருந்து ஆறு காட்சிகளை எடுத்துக் கொண்டு, அதற்கு லைவாக பின்னணி இசையமைத்தார். அது பார்க்கவே அழகாக இருந்தது. இந்தப் படத்துக்காக ரஹ்மான் சார் மெனக்கெட்டது, பாடல்கள் கொடுத்தது, விளம்பரங்களுக்கு வந்தது என அவரது ஆதரவு அளப்பரியது. இப்படத்துக்காக நாங்கள் உழைத்தது 5%, என்றால் ரஹ்மான் சார் உழைப்பு 95%" என்றார்.
இந்த மாதிரி படம் இப்போது தேவையா எனக் கேட்கப்பட "தேவையா தேவை இல்லையா என்பதை முடிவு செய்யவே முடியாது. ஒருவர் எழுதுகிறார், நடிகர் சம்மதிக்கிறார், இசையமைப்பாளர் சம்மதிக்கிறார், தயாரிப்பாளர் வருகிறார் எல்லோரும் சேர்ந்து நம்புகிறோம். எல்லா படமுமே அப்படி தான் நடக்கிறது. இந்தப் படமும் ஓடும் என தெரிந்த பின் எடுக்கப்படுவதில்லை. எல்லாமே மக்களுக்கு பிடிக்கும் என்ற முயற்சியால் எடுக்கப்படுகிறது. அதில் சில வெற்றியடைகிறது, சில தோல்வியாகிறது. ஆனால் நோக்கம் என்பது ஒன்றுதான். இந்தக் காலம், அந்தக்காலம் என்பதெல்லாம் இதில் இல்லை. வித்தியாசமாக இருக்கிறது என்பதால் படம் ஓடிவிடாது, மக்களுக்கு பிடிக்க வேண்டும்" என்றார்.
இதில் வசனங்கள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என தோன்றுகிறதா என்றதும் "இல்லை எனக்கு அப்படி தோன்றவில்லை. அப்படித்தான் அவர் கொண்டு வந்தார். என்னை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று தான் அவரிடம் கேட்டேன். அவர் ஒரு மராத்தி இயக்குநர். அவர் ஊரில் இல்லாத நடிகர்களா என்னை ஏன் கேட்கவேண்டும் என்பதுதான் கேள்வியாக இருந்தது. என்னுடைய படங்கள் பார்த்து பிடித்து என்னிடம் வந்தார். இது ஒரு முயற்சி தானே, முயன்றுபார்க்கலாம் என நினைத்தேன்" என்றார்
கையில் கட்டு போட்டிருப்பது பற்றி கேட்கப்பட "பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் `பத்தான்' என்ற பட சண்டைக்காட்சியின் போது fracture ஆகிவிட்டது. எட்டு வாரங்களுக்கு கட்டு போட சொன்னார்கள்" என்றார்.
பாலிவுட்டுக்கு தமிழ் நடிகர்கள் செல்வது பற்றி கேட்கப்பட "நமக்கு தெரியாத மொழி பேசும் ஊருக்கு செல்லும் போது, அந்த மொழியை கற்று, கலாச்சாரத்தை புரிந்து கொண்டு நடிப்பது, நம்முடைய சௌகர்யமான தன்மையை உடைத்து வெளியே வரும் வழி. அது நம்முடைய சுதந்திரத்தை போன்றது. உலகின் எந்த மொழிக்கு போனாலும், அங்கு ஒரு கதையை தான் சொல்ல போகிறோம். அந்தக் கதையில் ஏதோ ஒரு உணர்வு தான் உள்ளது. அது காதலோ, நட்போ, நாடோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது வேறு வேறு மொழியில் சொல்கிறோமே தவிர, அனுபவம் ஒன்று தான்" என்றார்.
நீங்கள் டபுள் ஹீரோ படங்களில் நடிக்க மாட்டேன் என சொன்னீர்களே எனக் கேட்கப்பட "இயக்குநர் என்னை ஏமாற்றிவிட்டார், நான் தான் ஹீரோ என சொல்லி கூட்டி சென்றார், எனக்கு தெரியாது அது" என கலகலப்பாக பதில் அளித்தார்.
இறுதியாக மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள `டிரெயின்' படம் எப்போது வெளியாகும் எனக் கேட்கப்பட "எனக்கு அது தெரியவில்லை, இப்போது அதை பற்றி பேச வேண்டாம். அதை தாணு சார் தான் சொல்ல வேண்டும்" என்றார் விஜய் சேதுபதி.

