’’ `ப்ரியமுடன்' என்றுதான் முதலில் வைத்தோம்’’... - `வித் லவ்' டீம் சொன்ன தகவல் | With Love
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'வித் லவ்'. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தை, மதன் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் தயாரித்திருக்கின்றனர். பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தது இப்படக்குழு.
அதில் நடிகராக அறிமுகமாவது பற்றி அபிஷனிடம் கேட்கப்பட, "டூரிஸ்ட் ஃபேமிலியில் பணியாற்றியவர்தான் இப்படத்தின் இயக்குநர். அதில் பணியாற்றியபோதே இந்தக் கதையை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். மிகவும் க்யூட்டான கதையாக இருந்தது. அவர் கதையை நரேட்டும் செய்தார், ஒரு பார்வையாளனாக எனக்கு பெரிய திருப்தி கொடுத்தது. உடனே நடிக்க சம்மதித்தேன். நான் நடிப்பது என்பதை திட்டமிடவில்லை. அப்போது மேடம் (சௌந்தர்யா) தான் எனக்குள் நடிக்கும் எண்ணத்தை விதைத்தார். என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் நம்பினார்கள். சில படங்கள் இயக்கியபின் நடிக்கலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நம்பவில்லை" என்றார்.
”உங்களையும் பிரதீப் ரங்கநாதனையும் ஒப்பிடுகிறார்களே” என்றதும், "இருவரும் ஒரே வகையில் பயணிப்பதால் அந்த ஒப்பீடு இருக்கலாம். பிரதீப் ரங்கநாதனும் நானும் ஒரு படம் இயக்கிவிட்டு அடுத்த படத்தில் ஹீரோவாக மாறிவிட்டோம். அதனால் இதுபோன்ற கருத்து வருகிறது. டீசரில் வரும் காட்சிகள் பயங்கர எனர்ஜி காட்சிகளிலிருந்து வந்தது. அதற்கான காரணம், படத்தில் இருக்கிறது. ஆனால், படம் பார்க்கும்போது விமர்சனங்கள் காணாமல் போய்விடும் என நம்புகிறேன்" என்றார்.
இப்படத்துக்கு ஏன் ஆங்கில தலைப்பு என்றதும், "இந்தப் படத்திற்கு நிறைய பெயரை யோசித்தோம். படம் பார்த்து முடித்த போது, இது ஒரு லவ் லெட்டர்போல இருந்தது. எனவே ’வித் லவ்’ உடன் உங்களுக்கு இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறோம் என்பதைப்போல இந்த தலைப்பை வைத்தோம்" என அபிஷன் கூற, பின்னர் பதில் அளித்த தயாரிப்பாளர் மகேஷ், "முதலில் இப்படத்திற்கு `ப்ரியமுடன்' என்றுதான் தலைப்பு வைத்தோம். ஆனால் அந்த தலைப்பை எங்களுக்கு தரவில்லை, அதனால்தான் இந்தப் பெயரை வைத்தோம். அவர்கள் வேறு ஒரு படத்துக்கு அதைக் கொடுத்துவிட்டதால் எங்களுக்குக் கிடைக்கவில்லை. `குட் நைட்', `லவ்வர்', `டூரிஸ்ட் ஃபேமிலி' என மூன்று படங்களும் ஆங்கில தலைப்புதான். இதற்காவது தமிழில் வைக்க முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை" என்றார்.

