ரஜினிகாந்த் உடனான ’தர்மன்’ பட அனுபவம் எப்படி இருந்தது? அஸ்வத் மாரிமுத்து பேட்டி!!
ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் `தர்மன்'. சிம்ரன், ராஷி கன்னா முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்து வருகிறது.
கடந்த ஜூலை 25-ம் தேதி இப்படத்தின் படபிடிப்பு தொடங்கிய நிலையில், மூன்றாம் கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தச்சூழலில் தான், தர்மன் படத்தில் ரஜினிகாந்த் உடன் பயணித்த அனுபவம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ”ரஜினிகாந்த் சாருடன் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதற்கு முன்பு வேலை செய்த பிரதீப் மற்றும் அசோக் இருவரும் இளம் கதாநாயகர்கள். தற்போது, 2 மாதங்களாக ரஜினி சாருடன் பணியாற்றுகிறேன். அவரைப் போல ஓர் இனிமையான நபரை நான் பார்த்தது இல்லை. என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் எழுந்து நிற்பார். இதற்கான காரணத்தை ஒருமுறை ரஜினி சாரிடம் கேட்டபோது, ‘இது கலைக்கும் இயக்குனருக்கும் நான் கொடுக்கும் மரியாதை’ எனக் கூறினார்” என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் சுந்தர் சி இப்படத்தின் இயக்குநராக முதலில் அறிவிக்கப்பட்டார், ஆனால் அவர் இத்திட்டத்திலிருந்து விலகினார். பின்னர், 'டான்' திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி பின்னர் அவரும் மாற்றப்பட்டு இப்போது அஸ்வத் மாரிமுத்துவின் இப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

