"ஜெயலலிதாவுக்கு எதிராக பேச்சு... என்னை காப்பாற்றிய பாக்யராஜ்" - ரஜினிகாந்த் சொன்ன சம்பவம்! | Rajini
ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் பாக்யராஜ் அவருக்கு அளித்த உதவிகளை நினைவுகூர்ந்தார். 'பதினாறு வயதிலிலே' படத்தில் பாக்யராஜ் அவருக்கு வசனம் சொல்லித்தர உதவியதாகவும், ஜெயலலிதாவை விமர்சித்தபோது கல்லடியில் இருந்து காப்பாற்றியதாகவும் கூறினார். பாக்யராஜ் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அவருடைய ஒவ்வொரு படமும் புரட்சிகரமாக இருக்கும். `முந்தானை முடிச்சு' படத்தை பார்க்கும் போது இடைவேளையில் குழந்தையை தாண்டும் காட்சியில், தியேட்டரே ஆடி போய்விடும். அதற்கு பிறகு அந்தக் கதையை நகர்த்துவது சாதாரண விஷயம் இல்லை. `அந்த ஏழுநாட்கள்' படத்தில் ஒரு வீடு ஒரு ஏணி, ஹீரோவுக்கு மலையாளம் ஸ்லாங், ஹார்மோனியம் அதை வைத்துக் கொண்டு சூப்பர் டூப்பர் ஹிட். சொல்லப்போனால் பாக்யராஜுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. இவர் மட்டும் இந்தியில் இருந்திருந்தால் இன்னும் பெரிய அளவில் புகழடைந்திருப்பார். பாக்யராஜ்க்கு இருக்கும் மைனஸ், பல க்ரியேட்டர்ஸ்க்கும் இருப்பது. கதை கதை என அலைந்து வாழ்க்கையை விட்டுவிடுவார்கள். அதனாலேயே பணம் சம்பாதிப்பதை மறந்துவிட்டார். அவருடைய படங்களின் ரைட்ஸை வாங்கி படம் எடுத்து பணம் சம்பாதித்த பலர் இருக்கிறார்கள். அந்த ரைட்ஸை அவர் முறையாக விற்றிருந்தால், பல சொத்துக்களை சேர்த்திருப்பார்.
அவர் எப்போதும் யாரையும் காக்கா பிடித்ததோ, ஜால்ரா அடித்ததோ கிடையாது. மனதில்படுவதை பேசுவார், அதில் உண்மை நியாயம் இருக்கும். மக்கள் திலகம் எம் ஜி ஆர் என்னுடைய திரையுலக வாரிசு பாக்யராஜ் என சொல்கிறார் என்றால் எவ்வளவு அவரை நேசித்திருப்பார். அதுமட்டுமல்ல, எம் ஜி ஆர் முன் நின்று பாக்யராஜ் திருமணத்தை நடத்தி வைத்தார். அவ்வளவு எளிதில் யாரும் அவர் இதயத்துக்குள் போக முடியாது. அவருடைய இதயக்கனி பாக்யராஜ்.
அவருக்கு மிகப்பெரிய பலம் பூர்ணிமா. அவருடன் நான் `தங்கமகன்' படத்தில் நடித்தேன். பாம்பேயில் பிறந்து வளர்ந்த பெண், ஆங்கிலத்தில் தான் பேசுவார். இவர் பாக்யராஜை திருமணம் செய்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் நம்ம ஆளுக்கு ஆங்கிலம் வராது. ஆனால் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒரு முறை அவரை பார்த்துவிட்டால், ஆண்களுக்கே அவரை பார்த்தால் காதல் வரும். `அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் ஒரு கெஸ்ட்ரோலை எழுத்தாளர் தூயவனுக்காக செய்து கொடுத்தார். வந்து ஐந்து நிமிடத்தில் படபடவென தயாராகி நடித்தார்.
நடிப்பில் உதவிய பாக்யராஜ்
`பதினாறு வயதிலிலே' படத்தில் நடிக்கும் போது நான் பட்ட சிரமங்களை பற்றி சொன்னார். அதில் நடிப்பதில் டென்சன் என்ன என்றால் அது RO ஃபிலிமில் எடுத்தது. அது கிடைப்பது ரொம்ப கஷ்டமானது. நான் அப்போது நான்கு படங்களில் தான் நடித்திருந்தேன். கமல்ஹாசன், ஸ்ரீதேவி எல்லாம் ஸ்டார்ஸ். முதலில் அவர்களின் காட்சிகளை எடுப்பார்கள். சூரியன் மறையப்போகும் வேளையில் எங்கப்பா ரஜினிகாந்த் என தேடுவார்கள். ஒருபக்கம் பிலிம் தீரும், இன்னொரு பக்கம் லைட் போகும், இதில் எனக்கோ வசனம் பேசுவதில் சிக்கல். எனவே எனக்கு வசனம் சொல்லித்தர வேஷ்ட்டி சட்டை அணிந்த ஒருவர் வருவார். அவர் தான் பாக்யராஜ். நான் அந்தப் படத்தில் பேசிய மாடுலேலேஷனில் 90 சதவீதம் பாக்யராஜ் சொல்லி கொடுத்தது தான். சிகரெட் போட்ட பின் `இதெப்டி இருக்கு' சொல்ல சொன்னது அவர் தான்.
சில கதைகளில் சந்தேகம் வரும் போது பாக்யராஜ் சாரை அழைத்து தான் கேட்பேன். படையப்பாவில் நீலாம்பரி பாத்திரம் உருவாக்கத்தில் அவரது உதவியும் இருக்கிறது. அதேபோல பாபா படம் செய்யும் போது கேட்டேன் `சார் நீங்கள் ஆன்மிக நபர் ஓகே ஆனால் எல்லோரும் ஆன்மிக வழியை ஏற்பார்களா? இது கமர்ஷியலாக எப்படிப்போகும் என தெரியவில்லை, ரிஸ்க்' எனக் கூறினார். ஒரு தீர்க்கதரிசி போல அவர் சொன்னது அப்படியே நடந்தது. இனி அவர் படம் இயக்குவதாக சொல்கிறார், அந்தப் படம் பெரிய ஹிட் ஆகும்.
கல்லடியில் இருந்து காப்பாற்றினார்!
பிறகு இன்னொரு விஷயத்துக்காக பாக்யராஜ் சாரை என் வாழ்நாள் எல்லாம் மறக்க முடியாது. இங்கு வந்ததற்கு முக்கிய காரணம் கூட அதுதான். அதை எப்படியாவது மக்களுக்கு சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தேன். 95ல் சிவாஜி சாருக்கு செவாலே விருது மலேசியாவில் கொடுத்தார்கள். அதற்காக சினிமா துறை மொத்தமும் அவரை பாராட்ட வேண்டும், அரசும் சேர்ந்து பாராட்ட வேண்டும் என சேப்பாக்கம் மைதானத்தில் விழா ஏற்பாடானது. அதற்கு முதலமைச்சர் தான் சிறப்பு விருந்தினர். கடைசியில் நான் தான் நன்றியுரை வழங்க வேண்டும். நான் பேசும் போது ஜெயலலிதாவை கோபமாக விமர்சித்து பேசிவிட்டேன். எப்போதும் கோபத்திற்கு ஆயுசு கம்மி, ஆனால் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளுக்கு ஆயுசு அதிகம். அதனால் தான் கோபத்தில் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என பெரியவர்கள் சொல்வார்கள். அவரை பற்றி ஆவேசமாக பேசியது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அது சிவாஜி சாருக்கான விழாவாக இருந்தாலும் அதிமுகவை சார்ந்த பலரும் அங்கு வந்திருந்தார். நான் பேசி முடித்த பின்பு எல்லோர் முகமும் வாடியது. ஸ்ரீதேவி கூட என்ன இப்படி பேசிவிட்டீர்கள் எனக் கூறினார்.
மைதானத்துக்கு வெளியே இருக்கும் பேருந்துக்கு செல்ல எல்லோரும் ஜீப்பில் செல்லும் போது நானும் அதில் வருகிறேன் எனக் கூறினேன். அது ஓப்பன் ஜீப், சிலர் கல்லைவிட்டு எறிந்தனர். அதே சமயம் பாட்ஷா படம் வெளியான நேரம் என்பதால், ரசிகர்கள் ஆர்வமாக வந்து ஆட்டோகிராப் வாங்கினார். எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வருவதற்குள் நாங்கள் வந்த பேருந்து மூன்றும் கிளம்பிவிட்டது. நான் இந்தக் கூட்டத்துக்குள் மாட்டிக்கொண்டேன். தூரத்தில் போலீஸ் ஜீப் இருந்தது அவர்களும் ஜெயலதாவை எதிர்த்து பேசிய என்னை காப்பாற்ற முயன்றால் எதுவும் பிரச்சனை வருமோ என நினைத்து வேடிக்கை பார்த்தனர். சிலர் அடிக்கிறார்கள், கிள்ளுகிறார்கள் நான் என்ன செய்வது என யோசிக்கும் முன் ஒரு குரல் கேட்டது, பார்த்தால் பாக்யராஜ் ஓடி வருகிறார். அவர் வந்து போலீசிடம் ஆவேசமாக பேசி என்னை போலீஸ் ஜீப்பில் ஏற்றி பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து செல்ல வைத்தார். அதை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன். நீங்கள் நல்ல ஆயுளுடன் நீண்ட காலம் வாழ வேண்டும்" என்றார்.

