\
Blast Review
ArjunBlast Review

குடும்ப ஆக்ஷன் படமாக கவர்கிறதா `பிளாஸ்ட்'? | Blast Review | Arjun | Abhirami | Preity Mukundhan

முழுக்க முழுக்க ஆக்ஷனை பிரதானப்படுத்திய கதையை எடுத்துக் கொண்டு அதனை கொடுத்திருக்கும் விதத்தில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் சுபாஷ் கே ராஜ்.
Published on
குடும்ப ஆக்ஷன் படமாக கவர்கிறதா `பிளாஸ்ட்'?(2 / 5)

அதிரடி குடும்பம் vs கார்ப்ரேட் வில்லன் மோதலே பிளாஸ்ட் களம்!

ராஜாராமன் (அர்ஜூன்) ஒரு கராத்தே மாஸ்டர். அவரது மனைவி நீலவேணி (அபிராமி) தையல்காரராகவும் மகள் நிலா (ப்ரீத்தி முகுந்தன்) ஐடி துறையிலும் பணியாற்றுகிறார்கள். மற்றவருக்கு ஒரு பிரச்னை என்றால் தவறை தட்டி கேட்க வேண்டும் என சிறுவயதில் இருந்து தந்தை சொன்னதை கேட்டு வளரும் மகள் நிலா தவறு செய்பவர்களை பொளந்தெடுக்கிறார். இன்னொரு பக்கம் மலை கிராமம் ஒன்றின் அடியில் இருக்கும் கனிம வளத்தை சுரண்ட நினைக்கிறார் வருண் தயாளன் (ஜான் கொக்கேன்). ஆனால் மலையை குடைந்தால் அதன் அடிவாரத்தில் வாழும் மக்கள் இறந்து போவார்கள் என்ற அபாயம் இருக்கிறது. கார்ப்ரேட் வில்லன் என்பதால், அதனை பொருட்படுத்தாது தன் வேலையை துவங்குகிறார் வருண். சம்பந்தமே இல்லாத இந்த இரு கதைகளும் ஒரு புள்ளியில் மோதிக் கொள்ள அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இந்த பிளாஸ்ட்.

Arjun
Arjun
Blast Review
கருப்பு படத்துக்கு வந்த விமர்சனங்களை பார்க்கவில்லை! - ஆர் ஜே பாலாஜி

முழுக்க முழுக்க ஆக்ஷனை பிரதானப்படுத்திய கதையை எடுத்துக் கொண்டு அதனை கொடுத்திருக்கும் விதத்தில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் சுபாஷ் கே ராஜ். சின்ன ஒரு பிரச்சனை எப்படி சம்பந்தம் இல்லாத இருவரை மோத வைக்கிறது என்ற ஐடியாவும் சிறப்பு.

நடிப்பு பொறுத்தவரை அர்ஜூன் வழக்கம் போல ஆக்ஷன் + மாஸ் நடிப்பில் அசத்துகிறார். ஆனால் அவரையே ஓவர்டேக் செய்து கவர்கிறார் ப்ரீத்தி முகுந்தன். அவரின் சண்டை காட்சிகள் அனைத்தையும் நம்பும் விதத்தில் செய்யும் லாவகம் பெரிய ப்ளஸ். அபிராமியும் நடிப்பை விட அதிரடி காட்சிகளில் கூடுதல் சிறப்பு. படத்தின் மைய வில்லன் ஜான் கொக்கேன் என்றாலும் அவர் மிகவும் வழக்கமான வில்லனாக வந்து போகிறார். உப வில்லனாக வரும் அர்ஜுன் சிதம்பரத்துக்கு நல்ல அழுத்தமான வேடம். ஒரு சண்டைகாட்சியிலும் கவனம் ஈர்க்கிறார். பவன், பாலா ஹசன், வினோத் சாகர், விவேக் பிரசன்னா கொடுக்கப்பட்ட வேலையினை கட்சிதமாக முடிக்கிறார்கள்.

Abhirami
Abhirami
Blast Review
ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள `சிக்மா' ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Jason Sanjay | Sigma

பெண்கள் பாதுகாப்பு என தனியாக கருத்துக்களை திணிக்காமல், படம் போகிற போக்கிலேயே சில விஷயங்களை சொன்ன விதம், இரண்டாம் பாதியில் ஒரு கதாபாத்திரத்தின் சப்ரைஸ் ரிவீல், வேறு எங்கும் திசை மாறாமல் ஒரே மோடில் நகரும் கதை போன்றவை நன்று.

Preity Mukundhan
Preity Mukundhan

தொழில்நுட்ப ரீதியாக அருண் ராதாகிருஷ்னன் ஒளிப்பதிவு ஆக்ஷன் களத்துக்கு ஏற்ப மாஸ் காட்டுகிறது. ரவி பஸ்ரூர் பின்னணி இசை சில காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது, பல காட்சிகளுக்கு பாரமாகிறது. ஃபீனிக்ஸ் பிரபு சண்டைகாட்சிகள் நன்றாக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பு தட்டுகிறது. இடைவேளை காட்சி ஒரு சிறப்பான மொமண்ட் என்றாலும், ட்ரெய்லரில் சில விஷயங்களை காட்டாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பான தருணமாக அமைந்திருக்கும்.

Blast
Blast

சம்பந்தம் இல்லாத இரு கதைகள் ஒரு புள்ளியில் இணைகிறது என்ற கதை சுவாரசியம் என்றாலும், அதனை இணைக்க தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்ற திரைக்கதை மைனஸ். வில்லன் கும்பலை ஹீரோ குடும்பத்தை நோக்கி நகர்த்தும் ஒவ்வொரு விஷயமும் தற்செயலாக அல்லாமல் வலிந்து திணிக்கப்படுவது போல சம்பவங்களால் கோர்க்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் ஆக்ஷன் காட்சிகளில் செலுத்திய கவனத்தை, சுவாரஸ்யமான திரைக்கதை அமைக்கவும் செலுத்தி இருந்தால் உண்மையாகவே பிளாஸ்ட்டான ஒரு படமாக அமைந்திருக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com