மறக்க முடியாத துணைக்கதாபாத்திரங்கள்: உழைக்கும் பெண்களின் பிரதிநிதி; அசோதையாக ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகா
ஆணாதிக்கம் மிகுந்த யதார்த்தமான நடைமுறைச்சூழல்தான், திரைப்படங்களிலும் அப்படியே பிரதிபலிக்கிறது. பெரும்பாலான நாயகிகள் வெள்ளந்திகளாக, கனவில் மட்டுமே மிதப்பவர்களாக, கதாநாயகனை அண்டியிருப்பவர்களாக, கவர்ச்சி பிம்பங்களாக, லூஸூப் பெண்களாக மட்டுமே சித்தரிக்கப்படுவார்கள். இதன் உச்சம் என்று ‘ஜெனிலியா’ போன்ற பாத்திரங்களைச் சொல்லலாம்.
இதற்கு மாறாக மிக வலிமையான, ஆழமான குணாதிசயங்களுடன் கூடிய தனித்துவமான பெண் பாத்திரங்களை உருவாக்கும் இயக்குநர்கள் மிகக்குறைவு. பாலசந்தர் போன்ற அரிதான படைப்பாளிகள் மட்டுமே இந்த வரிசையில் உள்ளனர்.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் ‘அசோதை’ என்கிற பெண் பாத்திரம் மிக வலிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. ஸ்வாசிகா என்கிற மலையாள நடிகை, இந்தப் பாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
ஏராளமான மலையாளத் திரைப்படங்களில் நடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள ஸ்வாசிகா, ஆரம்பக் கட்டத்தில் கோரிப்பாளையம், மைதானம் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அவர் நடித்துள்ள படம் ‘லப்பர் பந்து’. அசோதை என்கிற இந்தப் பாத்திரம் பெரும்பாலான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. மட்டுமல்லாமல் விமர்சனங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பைப் பற்றி தவறாமல் குறிப்பிடுகிறார்கள்.
அசோதை - காதலும் கம்பீரமும் கலந்த கவிதை
‘லப்பர் பந்து’ படத்தில் வரும் கெத்து என்கிற பூமாலையின் மனைவி அசோதை. கிரிக்கெட் ஆட்டத்தில் உள்ள திறமை காரணமாக அடைமொழிப் பெயராக ‘கெத்து’ என்று பூமாலைஅழைக்கப்பட்டாலும், உண்மையில் கெத்தாக இருப்பவர் அசோதைதான். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த பூமாலையும் அசோதையும் காதல் திருமணம் செய்தவர்கள்.
பெயிண்டர் பணியில் இருந்தாலும் அதற்கு ஒழுங்காகச் செல்லாமல் கிரிக்கெட் விளையாடுவதையே முக்கிய வேலையாக வைத்திருக்கிறான் பூமாலை. அவன் பந்தை சுழற்றி அடிக்கும் லாகவம், ஸ்டைல், ரன்களைக் குவிக்கும் வேகம் காரணமாக ‘கெத்து’ என்கிற பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறான். ஆனால் குடும்ப பொருளதாரத்திற்காக பெரிதாக சம்பாதிப்பதில்லை என்பதுதான் பிரச்னை.
திருமண வயதைக் கொண்ட மகளுக்கு தகப்பனான நிலையிலும் கூட கிரிக்கெட்டை விடாமல் சுற்றிக் கொண்டிருக்கும் கணவனின் மீது அசோதைக்கு எரிச்சலும் கோபமும் இருக்கிறது.
ஆனால் அதே சமயம் உள்ளுக்குள் அளவிலாத காதலும் இருக்கிறது. வெளியே கோபம், உள்ளே காதல், வெளியே இறுக்கம், உள்ளே கிறக்கம் என்று இருமுனைகளில் உள்ள உணர்வுகளை தன்னுடைய நடிப்பில் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் ஸ்வாசிகா.
இவரது அறிமுகக் காட்சியே எந்தவொரு முன்னணி ஹீரோவின் என்ட்ரி சீனுக்கும் குறைவில்லாத வகையில் அத்தனை அட்டகாசமாக அமைந்துள்ளது. பொதுவாக ஹீரோவிற்கு தரப்படும் முக்கியத்துவத்தை ஒரு பெண் பாத்திரத்திற்கு தந்திருப்பதன் மூலம் இயக்குநர் பாராட்டுக்குரியவராகிறார்.
ஹீரோவிற்கு நிகரான ‘என்ட்ரி’ சீன்
மைதானத்தில் பந்துகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் ‘கெத்து’விடம் “ண்ணேய்.. ஓடிரு.. உன் பொண்டாட்டி வருது” என்று மரத்தின் மீதிருந்து ஒரு சிறுவன் எச்சரிக்கை தர, கெத்துவின் முகம் மட்டுமல்லாமல் அங்குள்ளோரிடமும் பதட்டம் ஏற்படுகிறது.
தலையில் துணியைக் கட்டிக் கொண்டு ஒரு டிராக்டரை ஓட்டிக் கொண்டு பந்தாவாக வரும் அசோதையைப் பார்த்து மைதானமே பதறுகிறது. “எங்க அந்தாளு?” என்று கூட்டத்தைப் பார்த்து முறைப்பாக விசாரிக்கிறாள் அசோதை. ஒளிந்து கொண்டிருக்கும் கெத்துவை காப்பாற்றுவதற்காக அவர்கள் பொய் சொல்ல “அப்ப யாருக்காக விசயகாந்த் பாட்டு போட்டீங்க?” என்று சரியாக கண்டுபிடித்து விடுகிறாள் அசோதை. வேறு வழியில்லாமல் தலையைக் குனிந்தபடி முன்னால் வந்து நிற்கிறான் கெத்து.
“ஒழுங்கா வந்து வண்டில ஏறு” என்று அசோதை அவனிடம் முறைப்புடன் சொன்னவுடன் மறுபேச்சு பேசாமல் டிராக்டரில் ஏறிக் கொள்கிறான். அனைவரையும் முறைப்புடன் பார்த்தபடி வண்டியைக் கிளப்பும் அசோதை, ஸ்டம்ப்புகளை உடைத்து டிராக்டரின் மூலம் ஆட்டப்பாதையை சேதப்படுத்துவதை மைதானத்திலுள்ள அத்தனை ஆண்களும் திகைப்புடன் பார்க்கின்றனர்.
“இனிமே எவனாது இந்தாளை விளையாட கூப்பிட்டீங்க?” என்று எச்சரித்தபடி செல்கிறாள் அசோதை. மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள என்ட்ரி சீன் இது. முதல் காட்சியிலேயே பார்வையாளர்களுக்கு அசோதை பாத்திரம் மீது அழுத்தமான கவனம் விழுந்து விட்டிருக்கும்படியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த காட்சியில், லப்பர் பந்தை அரிவாள்மனையால் வெட்டி, தூரத்தில் நிற்கும் சிறுவர்களின் மீது எறிகிறாள் அசோதை. வட்டிக்காசு கேட்டு வீட்டு வாசலில் நிற்பவனின் மீதான கோபமும் அதனுடன் இணைந்து கொள்கிறது. “உன் புருஷன் மீது இந்தக் கோபத்தைக் காட்டேன். எங்காச்சும் கிரவுண்டிலதான் இருப்பான்” என்று வட்டிக்காசு வசூலிக்கும் நபர் கோள் சொல்ல, கணவனை மொபைலில் அழைக்கிறாள் அசோதை.
பெயிண்டர் வேலையில் பிஸியாக இருப்பது போன்ற உரையாடலை ஏற்படுத்தி அவளை நம்ப வைத்து விடுகிறான் கெத்து. உரையாடலின் இறுதியில் ‘ஐ லவ் யூ’ என்று கெத்து சொல்ல, அதுவரை இறுக்கமாக இருக்கும் அசோதையின் முகத்தில் ஒரு மலர்ச்சியும் சிறிய வெட்கச்சிரிப்பும் தன்னால் வந்து இணைந்து கொள்கிறது.
குடும்பம் என்னும் அமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் அசோதைகள்
ஆனால் சில மணி நேரத்திலேயே கெத்து சொன்ன பொய் அம்பலமாகி விடுகிறது. ஆசைக் கணவனுக்காக பிடித்த உணவை தயார் செய்து வைத்த அசோதையின் முகத்தில் மீண்டும் கோபம் வந்து அப்பிக் கொள்கிறது. இரவில் வீட்டுக்குத் திரும்பும் கெத்து, பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கும் அசோதையின் முகத்தில் பைக்கின் ஹெட்லைட்டை அடித்த படி குறும்பு செய்கிறான்.
“நீ சொன்னது பொய்ன்னு தெரிஞ்சிடுச்சு” என்று மகள் எச்சரிக்கை செய்ய, அதிகம் பதட்டப்படாமல் இருக்கிறான் கெத்து. விளக்குமாற்றை கையில் எடுத்துக் கொண்டு அசோதை ஆவேசமாக கணவனைத் திட்டினாலும் அது வெறும் பாவனையே என்று தெரிகிறது. கெத்துக்கு சோறு கொண்டு வந்து மாமியாரையும் கடிந்து கொள்கிறாள் அசோதை.
பொறுப்பில்லாத கணவனை வைத்துக் கொண்டு ஒற்றை ஆளாக அந்தக் குடும்பத்தை தாங்கி நிற்கிறாள் அசோதை. வாங்கிய கடனைத் திருப்பித் தருவதற்காக, மனதை கல்லாக்கிக் கொண்டு வளர்த்து வரும் பசுக்கன்றை விற்று விடுவதில் அசோதையின் தன்மானவுணர்ச்சி தெரிகிறது.
பெண்ணின் திருமண வரனுக்காக மாப்பிள்ளை வீட்டார் வரும் நாளன்று கூட மைதானத்தில் பழியாகக் கிடக்கும் கணவனின் மீது அசோதைக்கு கோபம் கூடுகிறது. ‘பாப்பா கல்யாணம் முடியற வரை விளையாட போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு.. இல்லைன்னா. இங்கிருந்து நான் வரமாட்டேன்’ என்று சாமி சிலையின் முன்னால் அமர்ந்து அசோதை பிடிவாதம் பிடிக்கும் காட்சியும் கணவனுக்கு தரும் உளவியல் நெருக்கடியும் உணர்ச்சிகரமான காட்சி.
கணவன் மீது கோபம் இருந்தாலும் மற்றவர்கள் குறை சொல்வதை அசோதை விரும்புவதில்லை. கணவனை யாருக்கும் விட்டுத்தராத அன்பு தெரிகிறது. தன்னுடைய கணவனின் ஊதாரித்தனத்தை விமர்சிக்கும் தாயையும் கிண்டலடிக்கும் மகளையும் “சும்மா.. எப்பப்பாரு அவரைக் குத்தம் சொல்லிட்டு இருக்காத” என்று அசோதை வெடிக்கும் காட்சியில் உள்ளார்ந்த காதல் வெளிப்படுவது சுவாரசியமானது.
காதலின் பிரிவும் இணைப்பின் உணர்ச்சிகரமும்
தன்னுடைய பேச்சையும் செய்து தந்தை சத்தியத்தையும் மீறி கிரிக்கெட் விளையாடச் செல்வதோடு, அடிதடி சண்டையிலும் ஈடுபடும் கணவனிடம் “ஆள வுடு சாமி.. போதும்.. உன் கூட மாரடிச்சது.. நான் போறேன்.. குறை காலத்தையாவது மரியாதையா காப்பாத்திக்கணும். இனிமே உன் திசை பக்கமே வர மாட்டேன்” என்று கையெடுத்துக் கும்பிட்டு ஆவேசத்தோடு கிளம்பும் இன்னொரு காட்சியில் அசோதையின் கோபம் கொப்பளிக்கிறது.
கணவனின் பொறுப்பற்ற தன்மையை ஒரு கட்டத்திற்கு மேல் சகித்துக் கொள்ள முடியாத உண்மையான கோபம் அது. போகும் போது தன் கணவனுடன் அடிதடியில் ஈடுபட்ட இளைஞனையும் (மகளின் காதலன்) ஒரு முறை முறைப்பார்.. பாருங்கள்.. அட்டகாசமான எக்ஸ்பிரஷன்.
மனைவியின் பிரிவால் சோகத்தில் ஆழ்கிறான் கெத்து. மட்டுமல்லாது அந்தக் குடும்பத்தின் இயல்பே உறைந்து தொடர்ந்து இயங்க முடியாமல் தடுமாறுகிறது. ஒரு குடும்பத்தை தாங்கிப்பிடிப்பதில் பெண்ணின் பங்கு எத்தனை முக்கியமானது என்பது அவளுடைய விலகலின் போதுதான் அழுத்தமாக உறைக்கிறது.
வீட்டை விட்டுச் சென்றிருக்கும் மருமகளை திரும்ப அழைத்து வருவதற்காக மாமியார் செல்லும் காட்சி, இந்தப் படத்தின் சிறப்பான, உணர்ச்சிகரமான காட்சி. “ஒரு பொண்டாட்டி புருஷனை விட்டுப் போகலாம்.. ஆனா ஒரு புள்ளய அம்மா விட்டுட்டுப் போகக்கூடாது. அது தவிச்சுடும். உன் சேலையை விரிச்சுப் போட்டு அதிலேயேதான் படுத்திருக்கான்” என்று களையிழந்திருக்கும் வீட்டின் நிலைமையையும் மகனின் துயரத்தையும் பற்றி கெத்துவின் அம்மா உருக்கமாகச் சொல்ல, தன் இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு கலங்குகிறாள் அசோதை. சாதிய ரீதியான பிடிப்பையும் இறுக்கத்தையும் கொண்டிருந்த மாமியாரை, தன்னுடைய அன்பால் அசோதைவென்றிருக்கிறாள் என்பதை உணர்த்தும் காட்சி இது. (அசோதையும் கெத்துவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்).
வீடு திரும்பும் அசோதையும் கெத்துவும் சந்திக்கும் காட்சியும் சுவாரசியமானது. “நெனப்பு வந்தா ஒரு புடவைல படுக்க மாட்டியா.. இத்தனை புடவையை எடுத்துப் போட்டிருக்க.. யாரு துவைக்கறது?” என்று செல்லமாக கடிந்து கொள்ளும் மனைவியிடம் “ஏன்.. என்னை தனியா விட்டுட்டுப் போன.. இனிமே இப்படிப் போகாத” என்று சிறுபிள்ளை போல் கண்கலங்கி அணைத்துக் கொள்ளும் கணவனை இறுகப்பற்றிக் கொண்டு “ஏன்.. சின்னப்புள்ள மாதிரி அழுவுற.. அழாத” என்று தானும் கலங்கும் காட்சியில் மனைவி என்கிற பிம்பம் மறைந்து தாய் என்கிற பிம்பம் விஸ்வரூபமெடுக்கிறது. இது போன்ற காட்சிகளில் ஸ்வாசிகாவின் முகபாவங்கள் அத்தனை சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.
அசோதை - உழைக்கும் பெண்களின் பிரதிநிதி
தன்னுடைய கணவனைப் போலவே, வீட்டிற்கு வரவிருக்கும் மருமகனும் கிரிக்கெட் பைத்தியமாக இருப்பதைப் பற்றிக் கவலை கொள்ளும் அசோதை, மகளின் வாழ்க்கையும் தன்னைப் போல பாழாகி விடுமோ என்று அச்சம் கொள்கிறாள்.
“உங்க பையனுக்கு போன் போட்டு நீங்க ஆஸ்பத்திரில இருக்கறதா சொல்லுங்க. அவன் அரைமணி நேரத்திற்குள்ள வந்தா, இந்தக் கல்யாணம் நடக்கும்” என்று பையனின் அம்மாவிடம் சவால் விடுவது போல் பந்தயம் வைக்கிறாள் அசோதை. பையன் வரமுடியாத சூழல்.
“இந்த 30 நிமிஷத்தை வச்சு நான் இந்த முடிவை எடுக்கல... இருபது வருஷமா ஒருத்தன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன். அதை வெச்சு சொல்றேன். ஊருக்கு நல்லவனா இருக்கறவன்லாம், ஊட்டுக்கு நல்லவனா இருக்க மாட்டாங்க. என் ஊட்டுக்கு ஒரு நல்லவன் போதும்” என்று அந்தத் திருமணத்தை மறுத்து விட்டு அசோதை கிளம்பும் காட்சி ரணகளமானது. ஆனால் தன்னுடைய காதலில் உறுதியாக இருக்கும் மகள், பிறகு தாயையே ஜெயித்து விடும் நிறைவுக்காட்சி அபாரமானது.
அசோதை - ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. உலகமெங்கிலும் உள்ள உழைக்கும் பெண்களின் பிரதிநிதி. எத்தனையோ நூற்றாண்டுகளாக குடும்பம் என்னும் அமைப்பை தாங்கிப் பிடித்திருக்கும் உறுதியான பெண்களில் ஒருத்தி.
கணவனின் பொறுப்பற்ற தன்மை குறித்த கோபம், அதையும் மீறி பெருகி வழியும் உள்ளார்ந்த காதல், தன் மகளின் வாழ்க்கையும் தன்னுடைய வாழ்க்கை போல் அல்லல் மிகுந்ததாக மாறி விடுமோ என்கிற யதார்த்தமான அச்சம் போன்ற பல்வேறு உணர்வுகளை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கும் கம்பீரமான பாத்திரமான ‘அசோதை’யை சிறப்பாகக் கையாண்ட ஸ்வாசிகா, இந்த கேரக்டரை மறக்க முடியாதததாக ஆக்கி விட்டார்.