முதல்வர் விஜய்க்கு அல்போன்ஸ் புத்ரனின் கோரிக்கை! | Alphonse Puthren | CM Vijay
நிவின் பாலியின் ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்கள் மூலம் பிரபலமான இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் சமூக வலைத்தளத்தில் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
நிவின் பாலி நடிப்பில் உருவான `நேரம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அதன் பிறகு `பிரேமம்' படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படத்துக்கு பிறகு பெரிய இடைவெளிக்கு பின் பிரித்விராஜ் நடிப்பில் `கோல்டு' படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சினிமா பற்றி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அல்போன்ஸ் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு முகநூலில் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அந்த முகநூல் பதிவில் "முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். திரைப்படத் துறையின் 24 கலைகளையும் (crafts) மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வகையில் ஒரு புதிய திரைப்படக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தற்போதுள்ள கல்வி நிறுவனங்கள் 4 அல்லது 5 கலைகளை மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. நன்றி முதலமைச்சர் சார்." எனப் பதிவிட்டுள்ளார்.
இப்போது அல்போன்ஸ் அடுத்ததாக நிவின் பாலியின் 50வது படமாக உருவாக்கவுள்ள `விஜயம்' படத்தை இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அல்போன்ஸ் பதிவிட்டுள்ள இந்த கோரிக்கை சமூக வலைத்தளங்களில் கவனிக்கப்பட்டு வருகிறது.

