அஜித் Reference முதல் குட்டிக் கதை வரை - ஜனநாயகன் விஜயின் முழு பேச்சு | Jana Nayagan Audio Launch
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள `ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. விஜயின் கடைசி படமான இதன் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் ஹெச் வினோத் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, எனப் பலரும் சிறப்பு விருந்தினர்களாக லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய விஜய் "அதிக தமிழர்கள் வாழும் ஊர் மலேசியா. நம்ம தமிழர்கள் எந்த நாடு போனாலும் சொந்த நாடாக நினைத்து உழைப்பார்கள். மலேசிய நாட்டின் தூண்களாக நம் தமிழர்கள் இருக்கிறார்கள் என கேள்விப்படும் போது சந்தோசம். இங்கு இருக்கிற முருகன் கோவிலுக்கு மலாய்க்காரர்கள் போகிறார்கள், இங்குள்ள சைனாக்காரர்கள் தமிழில் பேசுகிறார்கள், நம் கலாச்சாரத்தை உயிரோடு வைத்திருக்கும் மலேசியாவுக்கு வாழ்த்துக்கள்.
இத்தனை வருடமாக தமிழ் சினிமாவுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு பெரியது, ஓவர் சீஸில் முக்கிய மார்க்கெட் மலேசியா மார்க்கெட். இங்கு நிறைய படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம். சில படங்களின் பெயர்களை கேட்டதும் மலேசியாவின் நினைவு வரும் நண்பர் அஜித் நடித்த `பில்லா' போல. நானும் `குருவி' போன்ற படங்களுக்கு வந்திருக்கிறேன். நமக்கு தான் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆச்சே. அப்படியான மலேசியாவில் ஜனநாயகன் படத்தின், இதை சொல்லலாமா எனத் தெரியவில்லை என்னுடைய கடைசி படத்தின் விழா, அதை சொல்லும் போது வலிக்கிறது என்ன செய்வது சரி அதை விடுங்கள். இந்த விழா இங்கு நடப்பதில் மகிழ்ச்சி. எவ்வளவு தூரம் தள்ளி இருந்தாலும் ஆதரவு தரும், இங்கு உள்ள என் ரசிகர்கள், ஊடக நண்பர்கள், சமூக வலைதள நண்பா நண்பிகள் மற்றும் மலேசிய அரசுக்கும் நன்றி.
தமிழ் சினிமா ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவ்வளவு வருடங்களில் தமிழ் மக்களின் சந்தோசம் துக்கத்தில், கொண்டாட்டம், ஆன்மிகம் என எல்லாவற்றிலும் தமிழ் சினிமா கலந்திருக்கிறது. அப்படிப்பட்ட தமிழ் சினிமாவில் நானும் சின்ன புள்ளியாக இருந்திருக்கிறேன். சினிமாவை விட்டு ஏன் போகிறீர்கள் என சிலர் கேட்கிறார்கள். சினிமா ஒரு கடல், அதன் கரை ஓரமாக மணல் வீடு கட்ட ஆசைப்பட்டேன். ஆனால் அதை ஒரு மாளிகையாக மாற்றி தந்தது நீங்கள்.
உங்களுக்கே தெரியும் இது பழைய கதைதான், நான் சினிமாவுக்கு வரும் போது சந்திக்காத அவமானம் இல்லை, அப்போது என் உடன் இருந்தது என் ரசிகர்கள் மட்டுமே. ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை 33 வருடம் இருந்திருக்கிறார்கள். எனவே நான் அடுத்த 33 வருடம் நான் அவர்களுடன் இருக்க போகிறேன். எனக்காக தியேட்டரில் அவர்கள் வந்து நின்றார்கள், அவர்களுக்கு ஒன்று என்றால் அவர்கள் வீட்டில் நான் இருக்க வேண்டும். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். நன்றி கடனை தீர்த்துவிட்டு தான் செல்வேன்.
ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஒரு ஆட்டோக்காரர் கர்ப்பிணி பெண்ணை ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரி அழைத்து சென்றார். அப்போது பயங்கர மழை, ஆட்டோக்காரர் அந்த பெண்ணிடம் குடையை கொடுத்து பார்த்து போகுமாறு சொல்கிறார். அதற்கு அந்த பெண், இந்த குடையை நான் எப்படி உங்களுக்கு கொடுப்பது எனக் கேட்க, அவர் சிரித்துவிட்டு வேறு யாராவது தேவைப்படுவோருக்கு கொடுங்கள் என சொல்லி சென்றுவிட்டார். மருத்துவமனை வாசலில் இருந்த பெரியவர் மழைக்கு பயந்து அமர்ந்திருக்கிறார். அவருக்கு இந்தப் பெண் குடையை கொடுக்க அவரும் எப்படி திருப்பி கொடுப்பது என்கிறார். அந்தப் பெண்ணும் தேவைபடுவோருக்கு கொடு என்றார். அந்த பெரியவர் பேருந்து ஏறும்போது, அங்கிருந்த பூக்கார அம்மாவுக்கு குடையை கொடுக்கிறார். கடைசியாக இந்தக் குடை ஒரு பள்ளிச்சிறுமியிடம் செல்கிறது. அந்த சிறுமியை அழைத்து செல்ல அவரின் தந்தை வருகிறார். மழையில் மகளை அழைத்து வர அவரிடம் குடை இல்லை. ஆனால் அந்த மகள் குடையுடன் வருகிறார். அந்த அப்பா வேறு யாரும் இல்லை, அந்த ஆட்டோக்காரர் தான், அந்த குடை அவர் கொடுத்த குடை தான். இந்தக் கதையின் நீதி முடிந்த வரை எல்லோருக்கும் சின்ன சின்ன உதவி செய்யுங்கள் வாழ்க்கை சுவாரஸ்யமாக அமையும். வெள்ளத்தில் தவிப்பவருக்கு படகு கொடுத்தால், நீங்கள் பாலையில் தவிக்கும் போது அது ஒட்டகம் திரும்ப வரும்.
உங்களுக்கு கெடுதல் செய்வாரையோ பழி வாங்கினால் அந்த நாள் மட்டுமே நீங்கள் மகிழ்வீர்கள். அவரை மன்னித்தால் வாழ்நாள் முழுக்க நிம்மதி இருப்பீர்கள். யாரையும் கஷ்டப்படுத்த இல்லை இந்த வாழ்க்கை. முடிந்த வரை நல்லது செய்யுங்கள். அது வரும்காலத்தில் உங்களுக்கு கைகொடுக்கும். பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் ஃப்ரீயாய் விடுங்கள்.
இனி இந்தப் படக்குழுவுக்கு வருவோம். நான் அனிக்கு MDS என பெயர் வைக்கப் போகிறேன். Musical departmental store. அதை திறந்து உள்ளே போனால் என்ன வேண்டுமோ அதை எடுத்து வெளியேவரலாம். அணி என்னை ஏமாற்றியதேயில்லை. அது என் படமாக இருந்தாலும் சரி, மற்றவர்களின் படமாக இருந்தாலும் சரி சிறந்த இசையை கொடுக்கிறார். படிப்படியாக ஏறி செல்கிறார்.
என் சகோதரர் ஹெச் வினோத் சமூக பொறுப்புள்ள படம் எடுப்பவர். சித்தாந்த ரீதியாக கருத்தை சொல்ல வேண்டும் என முயற்சிப்பார். அவருடன் முன்பே இணைய வேண்டியது. ஆனால் ஜனநாயகனில் பணியாற்றும்படி சூழல் அமைந்தது. என்னுடைய வில்லன் பாபி தியோல் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் படத்தில் மிக சிறப்பாக இருக்கும். அவருடைய இரு படங்களில் இருந்து இன்ஸ்பையர் ஆகி செய்தது தான் `ப்ரியமுடன்' மற்றும் `வில்லு'. அதை அவரிடம் `உங்களுக்கே தெரியாமல் உங்க படத்தை சுட்டு நான் நடித்திருக்கிறேன்' எனக் கூறினேன். அப்படியா என்ன படம் எனக் கேட்டார். அப்போதுதான் `அய்யய்யோ நானே வாய் குடுத்து மாட்டிக் கொண்டேனா என நினைத்தேன். மமிதா பற்றி சுருக்கமாக சொல்வதென்றால், இளைஞர்கள் கொண்டாடும் ட்யூட் ஆக இருப்பவர், ஜனநாயகனுக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் டாட்டராகவும் மாறுவார். பூஜா ஹெக்டே தமிழ்நாட்டின் மோனிகா பெல்லுச்சி. அவருடன் நடிப்பது மகிழ்ச்சியான ஒன்று. எப்போதும் ஹீரோ ஹீரோயினுக்கு தான் கெமிஸ்ட்ரி இருக்கும் என்பார்கள். ஆனால் எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். அது கில்லியில் துவங்கிய கெமிஸ்ட்ரி.
இப்படத்தின் தயாரிப்பாளர் பற்றி கூறவேண்டும். இந்தப் படம் பற்றி 2023ல் பேச்சு வார்த்தை நடத்த துவங்கிவிட்டோம். அதே நேரத்தில் என்னுடைய அரசியல் அறிவிப்பும் வந்துவிட்டது. அவரிடம் ஒரு விஷயம் தான் கேட்டேன். `சும்மாவே என் படத்திற்கு பிரச்னை வரும், இப்போது வேறு பயணத்தை துவங்கிவிட்டேன். இதை உங்களால் பண்ண முடியுமா என்றேன்? அவர் அதை யோசிக்கவே இல்லை. செய்யலாம் என்றார். அந்த பாசிட்டிவ் அணுகுமுறைக்கு நன்றி.
இறுதியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன் "வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும். சும்மா வவருவோர் போவோரை எல்லாம் எதிர்க்க முடியாது, வலுவானவரை எதிர்க்கும் போதுதான் ஜெயிக்கிற அளவு வலு நமக்கு வரும். விஜய் தனியா வருவாரா அணியா வருவாரா என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாயாக வந்தோம். 33 ஆண்டுகளாக அணியா தானே வந்திருக்கிறோம். இப்போது கூட விளக்கம் போதவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சஸ்பென்ஸில் தான் கிக் இருக்கும். எதோ பேசுறேன்னு நினைக்க வேண்டாம், மனதில் தோன்றியதை பேசுகிறேன், மக்களுக்காக பேசுகிறேன், பேசுவதோடு நிற்க மாட்டேன். 2026 History Repeats Itself." என்று பேசி முடித்ததும் யார் பெற்ற மகனோ பாடலை அரங்கமே படி அமர "நீங்க எவ்வளோ ட்ரை பண்ணாலும் அழமாட்டேன்" என சொல்லி நிகழ்வை முடித்தார்.

