"தனுஷ் சாரின் பெயரை தவறாக" - வீடியோ வெளியிட்டு விளக்கிய மான்யா | Manya Anand | Dhanush
பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் சில தினங்களுக்கு முன்பு யூடியூப் சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் பெயரை பயன்படுத்தி பட வாய்ப்பு கொடுப்பதாக தொடர்பு கொண்டார் எனக் கூறி இருந்தார். அவரின் இந்த பேட்டி தவறாக சித்தரிக்கப்பட்டு தனுஷ் மீதும் அவரது மேலாளர் மேலும் மான்யா குற்றம் சொல்கிறார் என்ற தொனியில் சித்தரிக்கப்பட்டு செய்திகள் பரப்பப்பட்டன.
அவர் சில தினங்கள் முன்பு அளித்த அந்த பேட்டியில் "தனுஷ் தரப்பில் இருந்து பேசுவதாக சொல்லி தனுஷ் நடிக்கும் ஒரு கதையில் நடிக்கிறீர்களா எனக் கேட்டார்கள். மேலும் அவர் சில நிபந்தனைகளையும் முன்வைத்தார். அது எனக்கு சரியாக தெரியவில்லை. மேலும் இது தனுஷ் சாரின் குழுவில் இருந்து வந்ததா என எனக்கு தெரியாது. அவர் குழு இல்லை என்றால் தனுஷ் சார் இதனை பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தார். இந்த பேட்டி சிலரால் தவறாக எடிட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.
இப்போது இதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் மான்யா ஆனந்த். அந்த வீடியோவில் "நான் தனுஷ் சாரின் மீது குற்றச்சாட்டு சொன்னதாக ஒரு வீடியோ பரவி வருகிறது. இதில் ஒரு தெளிவை கொடுக்க விரும்புகிறேன். அந்த பேட்டியில் ஸ்ரேயாஸ் என்பவரது பெயரை பயன்படுத்தி ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அது உண்மையிலேயே அவரா, இல்லையா என எனக்கு தெரியாது. மேலும் இதில் நான் இதை பற்றி மற்றவர்களிடம் கேட்ட போது `இது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்' என சொன்னதையும் பதிவு செய்தேன். அந்தப் பேட்டியிலும் தனுஷ் சாரின் பெயரை யாரோ தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. அதை நான் சொன்னதே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த. ஆனால் அதை எடிட் செய்து, விழிப்புணர்வு வீடியோவை, குற்றச்சாட்டாக மாற்றி இருக்கிறார்கள். என்னுடைய பெயரை பயன்படுத்தி மற்றவர்களை அவமானம் செய்கிறார்கள். எனவே இதை தெளிவுபடுத்த விரும்பினேன். அதற்காகவே இந்த வீடியோ. இனிமேல் இது போன்ற போலி செய்தியை பரப்பாதீர்கள்" எனப் பேசி இருக்கிறார்.

