"ஆமாம், இந்த முறை நான் பேச வேண்டியிருந்தது" - சர்ச்சைக்கு பதில் அளித்த அனஸ்வரா | Anaswara Rajan
அபிஷன், அனஸ்வரா நடிப்பில் உருவாகியுள்ள படம் `வித் லவ்'. பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் புரமோஷன் பேட்டிகளை படக்குழு அளித்து வருகிறது. அப்படி ஒரு பேட்டியில் நடிகை அனஸ்வரா கூறிய ஒரு விஷயம் பிரச்னையாக்கப்பட்டது. அந்தப் பேட்டியில், ’எப்படி அபிஷன் மற்றும் அனஸ்வரா இடையே நட்பு உருவானது’ எனக் கேட்கப்பட "இவர் பெரிய நடிகை, எனவே அவரிடம் போய் சஜஷன் சொல்லலாமா, நம்மை கோமாளி மாதிரி பார்ப்பாரா என தயங்கினேன். ஆனால் அவர் ஒரு விஷயம் செய்த பின்னால், இவரும் நம்மைப்போலதான் என நண்பர்கள் ஆகிவிட்டோம்" என அபிஷன் சொல்ல, "நான் இவரது Vibe வருவதற்காக கொஞ்சம் Dumb ஆக நடித்தேன். அப்படித்தான் அவரது லெவலுக்கு வந்தேன்" எனக் கூறினார் அனஸ்வரா. உடன் நடித்தவரை Dumb எனக் கூறிவிட்டார் என சொல்லி இந்த விஷயம் சர்ச்சை ஆக்கப்பட்டது.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, அந்தச் செய்தியை குறிப்பிட்டு இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார் நடிகை அனஸ்வரா. "இலகுவான உரையாடலில் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டு அனைவரும் ரசித்து சிரித்த ஒற்றை வரியைக் கண்டுபிடித்து, அதனை பிரச்னைக்குரிய வாக்கியமாக பிம்பப்படுத்த முயலும் நபருக்கு இதனைச் சொல்கிறேன்.
கருத்தைத் திரிப்பதோ, ஒன்றும் இல்லாத விஷயத்தை எதிர்மறையானதாக மாற்றுவதோ ஊடக அறம் அல்ல. உங்கள் மீது கவனம் குவிய வேண்டும் என நினைக்கிறீர்களா, அது நடந்துவிட்டது. ஆனால் நீங்கள் இதனைவிட மேம்பட்டவராக நடந்துகொள்ளலாம்.
சமீபத்தில், தேவையில்லாத விஷயங்களுக்கு எதிர்வினையாற்றவோ அல்லது முட்டாள்தனமான விஷயங்களில் ஈடுபடவோ கூடாது என்ற விதியை நான் வைத்திருந்தேன். ஆனால், என்னை வேறு ஒருவராக திரிக்க பார்க்கும்போது அந்த எல்லையைக் கடக்கிறேன். ஆமாம், இந்த முறை நான் பேச வேண்டியிருந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.

