"பொறுப்பாகவும் பயமாகவும் உணர்ந்தேன்" - அண்ணாவாக நடித்தது பற்றி சேத்தன்! | Parasakthi
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் `பராசக்தி'. சிவாவின் 25வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் அறிஞர் அண்ணா பாத்திரத்தில் நடித்துள்ள சேத்தனின் புகைப்படம் பகிரப்பட்டு "இதை நாங்கள் செய்யவில்லை. ஆனால் யார் செய்திருந்தாலும் அவன் என் தம்பி" என்ற வசனம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இப்படத்தில் அண்ணாவாக நடித்தது பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் நடிகர் சேத்தன்.
அந்தப் பேட்டியில் "சுதா கொங்கரா எனக்கு அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி விளக்கியபோது, நான் பொறுப்பாகவும் பயமாகவும் உணர்ந்தேன். ஆனாலும் என்னால் முடிந்த வரை சிறப்பாக செய்வேன் என உறுதியளித்தேன். செய்ய நானே பொறுப்பேற்றேன். படத்திற்கு டப்பிங் செய்யும்போது, சுதா ஒரு குறிப்பிட்ட காட்சியைச் சுட்டிக்காட்டி, `இது சிலிர்க்க வைத்தது, நிஜமாக அண்ணாவை பார்ப்பது போலவே இருக்கிறது' என்றும் சொன்னார். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக தோன்றுகிறேன் என என்னை நானே நம்ப வைக்க வேண்டும். ஆனால், அவரின் வீடியோ கிளிப்புகள் அதிகம் இல்லை. கிடைத்தவற்றிலிருந்து, என்னென்னவற்றை உள்வாங்க முடியுமோ அதை எடுத்துக் கொண்டு, மனதளவில் அண்ணாவைப் போல உணர ஆரம்பித்தேன். சுதா தந்த தகவல்கள் தாண்டி, அவரது ஆளுமை குறித்து நானும் சொந்த ஆராய்ச்சி செய்தேன்.
அவர் எவ்வாறு தயாராகிறார் என்பது குறித்து நாங்கள் நிறைய உரையாடல்கள் நடத்தினோம். அது நிறைய உதவியது. மற்ற இடைவெளிகளை சுதா கவனித்துக்கொண்டார். ஒரு திரைப்படத்தின் விஷயத்தில் விரிவான ஆராய்ச்சி செய்யும் சில இயக்குநர்களில் சுதாவும் ஒருவர். என் பாத்திரத்தில் நான் எதையும் குழப்பிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வதுதான் நடிப்பு திறமையின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம்.
`பராசக்தி' படத்தில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, சில சமயங்களில் அதைக் குறைப்பதும்கூட உங்கள் நடிப்பை மெருகேற்றும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். நடிப்பை அதிகப்படுத்துவது அந்தப் பாத்திரத்தை மோசமாக மாற்றிவிடும். விடுதலை போன்ற படங்களில்தான் மிகைப்படுத்தலான நடிப்பு தேவை. பராசக்தியைப் பொறுத்தவரை அதன் ஒரு பகுதியாக இருந்த போது உணர்ந்த நேர்மறை உணர்வு படத்தின் வெளியீட்டிற்குப் பிறகும் இருக்கும். அண்ணா போன்ற சக்திவாய்ந்த ஒருவராக நடிப்பது அடிக்கடி ஒரு நடிகருக்கு நடக்காது, இல்லையா?" என்று கூறியுள்ளார் சேத்தன்.

