திரைவிமர்சனம் | ”ஸ்வீட்ஹார்ட்” .. இன்னும் ஸ்வீட் ஆக இருந்திருக்கலாம்!
ஸ்வீட்ஹார்ட்(1.5 / 5)
திருமணம், குடும்பம், குழந்தை என பல கனவுகள்:
வாசு (ரியோ ராஜ்) மனு (கோபிகா ரமேஷ்) ஜோடி, கொஞ்சம் காதல், அடிக்கடி மோதல் என நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். தன் பால்ய பருவத்தில் ஏற்பட்ட சம்பவத்தினால், கமிட்மெண்ட், குடும்பம் என்றாலே வெறுப்பை காட்டுகிறார். ஆனால் மனுவுக்கு திருமணம், குடும்பம், குழந்தை என பல கனவுகள். இந்த முரண்பாடுகள் ஒரு இடத்தில் பெரியதாக வெடிக்க இருவரும் பிரிகின்றனர். சில மாதங்கள் கழித்து மனு, வாசுவால் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிகிறது. அதன் பின் என்ன ஆகிறது? இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா என்பதெல்லாம் தான் ஸ்வீட்ஹார்ட்டின் மீதிக்கதை.
லீட் ரோலில் நடித்திருக்கும் ரியோவுக்கு மிக சீரியசான ரோல்:
ஆண் பெண் உறவு சிக்கல், திருமண பந்த சிக்கல் போன்றவற்றை ஒரு ஃப்ரெஷ்ஷான விதத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஸ்வினீத் சுகுமார். காதல் எப்படி துவங்கியது, என்ன பிரச்சனை வந்தது என்ற நேர்கோட்டுக் கதையை, நான் லீனியராக மாற்றி சுவாரஸ்யப்படுத்த முயற்சித்திருக்கிறார். நடிகர்கள் பொறுத்தவரை லீட் ரோலில் நடித்திருக்கும் ரியோவுக்கு மிக சீரியசான ரோல். நிறைய காட்சிகளில் விரைப்பும் முறைப்புமாகவே வந்து போகிறார். எமோஷனலாக பேசும் காட்சிகளிலும், சில காமெடி காட்சிகளிலும் இயல்பான நடிப்பு எட்டிப் பார்க்கிறது. மனு ரோலில் நடித்திருக்கும் கோபிகா தனித்துத் தெரிகிறார். படத்துக்கு அழுத்தம் சேர்ப்பதே அவரது நடிப்பு தான்.
ரியோவின் நண்பராக வரும் அருணாச்சலேஷ்வரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்:
மன்னிப்பு கேட்கும் காட்சிகள், ரியோவின் தவறை புரிய வைக்க முயலும் காட்சிகள், சண்டையிடும் காட்சி, ஒளிந்து ஒளிந்து போன் பேசும் காட்சி என ஒவ்வொன்றிலும் அசத்தியிருக்கிறார். மலையாளத்தில் பட்டையை கிளப்பிய ரெஞ்சி பணிக்கரை அழைத்து வந்து, மிக வழக்கமான ஒரு டெம்ப்ளேட் அப்பா ரோலைக் கொடுத்திருக்கிறார்கள். ரியோவின் நண்பராக வரும் அருணாச்சலேஷ்வரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சதீஷ் சக்கரவர்த்தி கதாப்பாத்திரமும் சரி, அவரது நடிப்பும் சரி சற்றும் கதைக்கு பொருந்தவில்லை. கெஸ்ட் ரோலில் வரும் துளசி வழக்கம் போல் ஒரு எமோஷனல் சீனை நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தின் ப்ளஸ் எனப் பார்த்தால், ரிலேஷன்ஷிப் என்பதில் இருவரது பங்களிப்பும் முக்கியம் என்பதை அழுத்தமாக சொல்வது. நாயகன் என்னதான், தன் கடந்த காலத்தை சாக்காக சொன்னாலும் அது நிகழ்கால உறவை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம். எல்லா விஷயத்திலும் உனக்கு என்ன வேண்டும், உனக்கு என்ன சரி என சொல்கிறாயே தவிர என்னுடைய முடிவையோ, என்னுடைய தேவையோ என்ன எனக் கேட்டிருக்கிறாயா? என்ற நாயகியின் கேள்வி முக்கியமானது. க்ளைமாக்ஸில் கருத்தூசி போடுமாறு இருந்தாலும், குடும்ப கௌரவம் என்ற பெயரில், பெண்கள் மீது நடக்கும் சுரண்டல்களை சுட்டிக்காட்டியதும் சிறப்பு.
படத்தின் சறுக்கலுக்கு காரணம் என்ன?
மேலே சொன்ன எல்லா விஷயங்களும் வசனங்களாக மட்டுமே கடத்தப்படுகிறது என்பதே படத்தின் சறுக்கல். முதலில் காதல் கதையை நான் லீனியரில் சொல்லும் உத்தி வித்தியாசம் என்றாலும், அதனால் கதைக்கு எந்த பலமும் சேரவில்லை. படத்தின் திரைக்கதையை ”புரோட்டானாலே அது மாறன் புரோட்டா தான்” என பிச்சுப் போட்டு, கலைத்து கதை சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான அவசியமோ அல்லது அதனால் படத்திற்குள் சேர்ந்த சுவாரஸ்யம் என்ன?
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி அவ்வளவு பெரிதாக கவரவில்லை. பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தை படு கலர்ஃபுல்லாக காட்டுகிறது. படத்தின் பெரும்பாலான காமெடிகள் ஒர்க் ஆகவே இல்லை. குறிப்பாக ஹீரோவின் நண்பர் மற்றும் அவரது கேர்ள் ஃப்ரெண்ட் தொடர்பான காமெடிகள் ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்பேற்றுகிறது. இதில் போனசாக, ரெடின் கிங்ஸ்லி வைத்து கூடுதல் காமெடி வேறு. தன் ரிலேஷன்ஷிப் பற்றி நாயகி தன்னுடைய குடும்பத்தினரிடம் பேச ஏன் அவ்வளவு தயங்குகிறார் என்பதற்கான காரணம் ஏதும் அழுத்தமாகவே இல்லை. அதை விட சிக்கல் நாயகனின் மனநிலை சரியாக தெளிவுபடுத்தவில்லை.
சிறப்பாக எழுதப்பட்டிருந்தால் உண்மையில் ஸ்வீட்டாக இருந்திருக்கும் இந்த ஸ்வீட்ஹார்:
ப்ரேக் அப் செய்த பின்பும், போய் சண்டை போடுகிறார் என்பது காட்சியாக புரிகிறது, ஆனால் உணர்வாக அதில் எந்த லாஜிக்கும் இல்லை. அல்லது அந்த லாஜிக் தெளிவுர சொல்லவில்லை. மொத்தத்தில் ஒரு மார்டன் டே ரிலேஷன்ஷிப் பற்றியும், அதன் குழப்பங்கள் பற்றியும் மிக சுமாராக சொல்லியிருக்கும் படமாக முடிகிறது. இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தால் உண்மையில் ஸ்வீட்டாக இருந்திருக்கும் இந்த ஸ்வீட்ஹார்ட்.