சூர்யா 50: சுவாரஸ்யமான திரைப்பயணம்!
செய்தியாளர் புனிதா பாலாஜி
தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ... FEEL GOOD படங்களின் PRODUCER... சூரரைப் போற்றி தேசிய விருது வென்ற சூரன்... FORBES INDIA இதழ் பட்டியலிட்ட 100 பிரபலங்களில் ஒருவர்.. கலையுலக மார்கண்டேயன் சிவக்குமாரின் மூத்தமகன்... பருத்திவீரன் கார்த்தியின் பாசமிகு அண்ணன்.. இப்படி, பலவிதங்களில் அறியப்படும் சூர்யாவுக்கு இன்று 50ஆவது பிறந்தநாள்...
சென்டிமென்ட் காட்சிகளில் நடிக்கத் தெரியாது... டூயட் பாடல்களில் நடனமாட வராது என எங்கு விமர்சிக்கப்பட்டாரோ? அதே இடத்தில் வெற்றிகளால் பதிலடி கொடுத்து, தனிக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டவர், சூர்யா...
சூர்யாவின் திரைப் பின்புலமும், அவர் சினிமாவில் கடந்துவந்த பாதையும் மிக நீளமானது... நேருக்கு நேர் படத்தில் தொடங்கிய அந்த பயணம் கருப்பு வரை இடைநில்லாமல் நீள்கிறது. 27 ஆண்டு கால சினிமா பயணமும், 40 படங்களுக்கு மேல் கிடைத்த அனுபவமும் அவரை கங்குவா-வாக கர்ஜிக்க வைத்திருக்கிறது...
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கல்லூரி முடித்த காலத்தில் ஹீரோவாக வேண்டுமென்ற ஆசை அவருக்கு இல்லை... ஜவுளி நிறுவனம் தொடங்கி தொழிலதிபராக வேண்டுமென விரும்பியவர், ரசிகர்களின் இதயங்களுக்கு அதிபராவோம் என நினைத்திருக்க மாட்டார்.
ஆனால், காலம் அதைச் செய்தது... இயக்குநர் வசந்தின் நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, சரவணன் என்ற பெயரை அதில் சூர்யாவாக மாற்றினார் வசந்த்... அந்த சூர்யா இப்போது கருப்பு படத்தில் மீண்டும் சரவணன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வாழ்க்கை ஒரு வட்டம் என விஜய் சொன்ன வசனம், இதில் சூர்யாவுக்கு பொருந்திப்போயிருக்கிறது.
சூர்யா என்ற பெயரே தனக்கு பட்டம்தான் என்று கூறி, புகழாரங்களை புறம் தள்ளியவர், சூர்யா... சூர்யா என்றதும் ஹிட் படங்கள் மட்டுமல்ல, அவரின் அகரம் அறக்கட்டளை நினைவுக்கு வந்துவிடும்.. படங்களில் மட்டுமன்றி நடைமுறையில் தனது சமூக சிந்தனைகளை நிரூபித்த சூர்யா, கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து ஊக்கமளித்து வருகிறார்.