”சொந்த வீட்டிலேயே கொடுமை.. தயவு செய்து உதவி செய்யுங்கள்” - கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை
பிரபல பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா கடந்த 2005ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படித்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமக்கு பணியாளர்கள் கூட இல்லை என்றும், தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் தனுஸ்ரீ தத்தா குறிப்பிட்டுள்ளார்.
கண்ணீருடன் வீடியோ வெளியீடு!
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் தனுஸ்ரீ தத்தா, “கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தினமும் என் வீட்டில் வினோதமான சத்தங்களை எதிர்கொண்டு வருகிறேன். என் வீட்டின் மேற்கூரை மேலேயும், கதவுக்கு வெளியேயும் வினோதமான அதிகப்படியான சத்தங்களை அனுபவித்து வருகிறேன். கட்டிட மேலாண்மைக்கு புகார் செய்து சோர்வடைந்துவிட்டேன், பின்னர் சில ஆண்டுங்களுக்கு முன்பு புகார் செய்வதையே விட்டுவிட்டேன்.
இப்போது நான் அதனுடன் வாழ்ந்து, என் மனதை திசை திருப்பி மனநிலையை பாதுகாக்க இந்து மந்திரங்கள் இசையுடன் கூடிய ஹெட்போன்களை அணிந்துகொள்கிறேன். இன்று நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் எதிர்கொள்வதால் நான் நாள்பட்ட சோர்வு நோய் அறிகுறி உருவாகியுள்ளது” என்று அந்த சத்தங்கள் அடங்கிய வீடியோவை பதிவில் பகிர்ந்துள்ளார்.
மற்றொரு வீடியோவில் கண்ணீருடன் பேசியிருக்கும் அவர், “சொந்த வீட்டிலேயே என்னை கொடுமைப்படுத்துகின்றனர். மீ டூ புகார் அளித்ததில் இருந்தே என்னை துன்புறுத்துகிறார்கள். ப்ளீஸ் தயவு செய்து யாராவது எனக்கு உதவி செய்யுங்கள். மன அழுத்தம் காரணமாக எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.