நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்File image

பல கோடி இதயங்களை தாங்கிப்பிடித்த தங்க மகன்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் திரைப்பயணத்தை விவரிக்கிறது, இத்தொகுப்பு..
Published on

செய்தியாளர்: புனிதா பாலாஜி

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் திரைப்பயணத்தை விவரிக்கிறது, இத்தொகுப்பு.

அரை நூற்றாண்டு கால திரைப்பயணம்... 100க்கும் படங்களின் ஹீரோ... நாட்டின் உயரிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்... எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் ரசிகர்களின் அன்பை வென்ற தளபதி... அவர்தான் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

rajinikanth
rajinikanth

1975ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முக்கிய காலகட்டம். ஏனெனில் அப்போதுதான் கர்நாடகாவின் பஸ் கண்டக்டர் ஒருவர், தமிழ் சினிமாவை நோக்கி திரைப் பயணத்தைத் தொடங்கினார். அபூர்வ ராகங்கள் எனும் படத்தில் அறிமுகமாகி இன்று வரை அபூர்வ நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கிறார், சூப்பர் ஸ்டார். பஸ் டிக்கெட் பிடித்த கைகளில் பல கோடி இதயங்களை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார், இந்த தங்க மகன். ரஜினியின் சினிமாவில் அறிமுகமான காலத்தில் வந்த ஹீரோக்கள், அவரைப்போலவே ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

அப்பட்டியலில் சில தோல்விகளைக் கொடுத்ததும் காணாமல் போனவர்கள் உள்ளனர். ஆனால், எத்தனை தோல்விகள் வந்தாலும், வெற்றியின் தோள்களில் ஏறி வானத்துக்குச் செல்லும் வித்தை தெரிந்தவர்தான், ரஜினிகாந்த். அந்த திறமையும்- பொறுமையும் - உழைப்புமே அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற நட்சத்திர அந்தஸ்தை கொடுத்திருக்கிறது. ரஜினி வெறும் ஆக்ஷன் ஹீரோ மட்டுமல்ல.. அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகரும்கூட. ஆனால், கமல்ஹாசனைப் போல் ரஜினிக்கு நடிக்க வராது என்ற விமர்சனங்களும் உண்டு. இதை ரஜினியே பல மேடைகளில் ஒப்புக்கொள்வார்!

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

ரஜினியின் நடிப்புத்திறனை அறிய முள்ளும் மலரும், ஆறில் இருந்து 60 வரை போன்ற படங்களை குறிப்பிடலாம். குணச்சித்திர கதாபாத்திரங்களைப் போல், அலெக்ஸ் பாண்டியன், பில்லா, முரட்டுகாளை போன்ற மாஸ் படங்களின் ஹிட் கொடுத்து மிரட்டியிருக்கிறார், ரஜினிகாந்த். செண்டிமென்ட், ஆக்ஷன் மட்டுமில்லாமல் தில்லு முல்லு போன்ற காமெடி படங்களையும், தன் நடிப்பால் தாங்கியிருப்பார். எஜமான், தளபதி, அண்ணாமலை, வீரா, பாட்ஷா, அருணாசலம், படையப்பா, சந்திரமுகி என வெற்றிப் படங்களாக கொடுத்து, தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக உருவெடுத்தார்.

நடிகர் ரஜினிகாந்த்
Top 10 சினிமா செய்திகள்| ரஜினியின் ‘தளபதி’ ரீரிலீஸ்.. டிரெண்டிங்கில் 2வது இடத்தில் ’லக்கி பாஸ்கர்’!

ஷங்கரின் எந்திரன், பா. ரஞ்சித்தின் கபாலி, நெல்சனின் ஜெயிலர் போன்ற படங்களில் 100 கோடி ரூபாய் வசூலை எல்லாம் சாதாரணமாக எட்டி வீர நடைபோட்டார் இந்த வெற்றி நாயகன். 50 ஆண்டுகால சினிமா பயணத்தில், கருப்பு - வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3-டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முக்கிய நடிகர் இவர்தான். வெற்றியை மட்டுமே கொண்டாடும் சினிமாவில் பல தோல்விகளை எதிர்கொண்டு போராடியவர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

புகழ் வாழ்த்துகள் மட்டுமின்றி, அதீத விமர்சனங்களையும் எதிர்கொண்டார். 50 ஆண்டுகால சினிமா அனுபவம், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், எண்ணற்ற விருதுகள் என, வீசும் காற்றாய் ஓயாமல் தொடர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார், ரஜினி.

எவ்வித பின்னணியும் இல்லாமல் கலைத்துறைக்குள் நுழைந்து, தனக்கென தனி பின்னணியை உருவாக்கிக் கொண்ட ரஜினிகாந்தின் பெயர் இன்றி, தமிழ் சினிமா முழுமையடையாது.. அதனால்தான், அவர் அன்றும் இன்றும் மட்டுமல்ல என்றுமே சூப்பர் ஸ்டார்.

நடிகர் ரஜினிகாந்த்
சரவெடி!! இந்திய சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனை.. 6 நாளில் 1000 கோடி வசூலை அள்ளிய ’புஷ்பா 2’!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com