பட்டையைக் கிளப்பும் கூலி.. 4 நாட்களில் உச்சம்தொட்ட வசூல்..!
ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.404 கோடிகளுக்கும் மேல் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. ரஜினி - லோகேஷ் கூட்டணியின் எதிர்பார்ப்பு மற்றும் விடுமுறை நாட்களில் வெளியானது, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ரஜினிகாந்தின் கூலி ஆகஸ்ட் 14 வெளியான நிலையில் வசூலிலும் பல சாதனைகளை செய்து வருகிறது. அதே நாளில் ஹ்ரித்திக் ரோஷன் - ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவான `வார் 2' படமும் வெளியானது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், சனி, ஞாயிரு என தொடர் விடுமுறையை மனதில் வைத்து வெளியானது இரண்டு படங்களும். விமர்சன ரீதியாக இரண்டு படங்களுமே மோசமான வரவேற்பை தான் பெற்றன.
கூலி பொறுத்தவரை ரஜினி - லோகேஷ் கூட்டணி என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. அதனாலேயே இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே முதல் நாள் வசூலில் அனைத்தையும் முறியடித்து 151 கோடி வசூலித்து முதல் இடத்தை பிடித்தது கூலி. முதல் நாள் மட்டுமல்லாது, அதற்கடுத்த தினங்களிலும் கூலி படத்திற்கு கூட்டம் வரவே செய்தது. இந்திய அளவில் கூலி முதல்நாள் வசூல் 65 கோடியாகவும், இரண்டாம் நாள் 55 கோடியாகவும், மூன்றாம் நாள் 39 கோடியும், நான்காம் நாள் 30 கோடியும் என சொல்லப்பட்டது.
கரங்கள் ஒசரட்டுமே
இந்நிலையில் 4 நாட்களில் கூலி திரைப்படம் செய்த வசூலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கூலி திரைப்படம் உலகளவில் ரூ.404 கோடிகளுக்கும் மேல் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற முதல் இடத்தை பிடித்துள்ளது.
கூலி, வார் 2 இரண்டு படங்களுமே சமூக வலைத்தளங்களில் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த படங்களே. எனினும் கூலி படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இன்றி, அதிகரித்தே வருகிறது. அதற்கு முக்கியமான காரணம், படத்தின் முதல் நான்கு நாட்கள் மற்றும் படத்திற்கு இருந்த டிமாண்ட். படம் எப்படி இருந்தாலும் ரஜினி படத்தை தியேட்டரில் பார்த்து விடுவார்கள் என்பதும், முன்பதிவு செய்யப்பட்டதும் முக்கிய காரணம்.
விடுமுறை தினங்கள் நேற்றோடு முடிந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் இந்தநிலை தொடர்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனாலும், கண்டிப்பாக படம் ஒரு பெரிய வசூல் செய்யும் என்கிறது சினிமா வட்டாரம்.