‘மார்ச் 26ல் ரிலீஸ் இல்லை’ சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் தள்ளிவைப்பு!
வரும் 26 ஆம் தேதி வெளியிடுவதாக இருந்த சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நடிகை பிரியங்கா அருள் மோகன் இதில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பாளராக கலை அரசு படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விஜய்யின் அடுத்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார் என்பதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் விஜய் ரசிகர்களும் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருப்பதால், அதையே காரணம் காட்டி படக்குழு ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அறிவிப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள்.