”ராசாவே உன்ன காணாத நெஞ்சு..” காற்றில் கலந்த காந்தக்குரல்.. சென்று வாருங்கள் ஜெயச்சந்திரன்!
காந்தக்குரல் ஜெயச்சந்திரன்
“ராத்திரி 8 மணி ஆனா அவன் நல்லா பாடுவான். அது என்னமோப்பா அவன் பாடுனா மனசுக்கு ரொம்ப எதமா இருக்கும்.. கேட்குறதுக்கு காதுக்கு சுகமா இருக்கும்” வைதேதி காத்திருந்தாள் படத்தில் வரும் அந்த காட்சியில் இப்படித்தான் ஒருவர் சொல்வார். ஆம், மனதுக்கு ரொம்ப இதமாக, காதுக்கும் சுகமாக இருக்கும். அந்த குரலுக்கு சொந்தக்காரர்தான் பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன். இசைஞானி இளையராஜாவின் இதயத்தில் வழியும் ராகங்களை அப்படியே உள்வாங்கி, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி பாடல்களின் மூலம் தமிழ் நெஞ்சங்களை இன்று வரை தாலாட்டிக் கொண்டிருப்பவர். ஜெயச்சந்திரனின் காந்தக் குரல் இன்று காற்றில் கரைந்துவிட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் தமது காந்தக் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பி.ஜெயச்சந்திரன் என்றாலும், தமிழ் சமூகத்திற்கு தன்னுடைய குரலால் அவர் அளித்த கொடை அளப்பரியது. தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர்களை கேட்டால் பலரும் எஸ்பிபி, யேசுதாஸ், மலேசியா வாசுதேசன், மனோ வரை சொல்வார்கள். அந்த வரிசையில் அதிகம் பேசப்படாதவர்கள் பி.ஜெயச்சந்திரன், அருண்மொழி போன்றவர்கள்.
இசைஞானி - ஜெயச்சந்திரன் கூட்டணி
கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் பிறந்த ஜெயச்சந்திரன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். 1980 மற்றும் 90களில் இவரது குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய இசைப் பயணத்தை எம்.எஸ்.விஸ்வநாதன் உடன் தொடங்கினார் என்றாலும் இளையராஜா உடனான அவரது பயணம் மகத்தானது, மனதில் நிற்பது.
இசைஞானி இளையராஜா உடன் இணைந்து தமிழ் நெஞ்சங்களை தன்னுடைய காந்தக் குரலால் தாலாட்ட ஆரம்பித்தார். இந்தக் கூட்டணியில் தனித்துவமாக அமைந்த சில பாடல்களை மட்டும் இங்கே பார்க்கலாம். கிழக்கே போகும் ரயில் படத்தில் ’மாஞ்சோலை கிளிதானோ’ பாடல் கிராமத்து மனம் கமழும் காதல் பாடல். அடுத்து அந்த ஏழு நாட்கள் படத்தில் வரும் ’கவிதை அரங்கேறும் நேரம்’ பாடல் தேன் போல இனிமையாக காதல் ரசம் சொட்டும்படி இருக்கும்.
ஜெயசந்திரன் இளையராஜா கூட்டணியில் அதிகம் பேசப்படாத பாடல்களில் ஒன்று ’காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ படிக்கலாம் ரசிக்கலாம்’ பாடல். கேட்க கேட்க கேட்கத்தோன்றும் பாடல்.
உச்சம்தொட்ட வைதேகி காத்திருந்தாள்
ஜெயச்சந்திரன் - இளையராஜா கூட்டணியில் அமைந்த பல பாடல்கள் தனி ரகம். பகல் நிலவு படத்தில் வரும் ’பூவிலே மேடை நான் போடவா’, பிள்ளை நிலா படத்தில் வரும் ’ராஜா மகள் ரோஜா மலர்’ போன்ற பாடல்கள் அவர்களது ரசிகர்கள் மட்டும் விரும்பி கேட்கும் பட்டியலில் இடம்பெற்ற பாடல்கள்.
இளையராஜா ஜெயச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய ஹிட் அடித்த பாடல் நானே ராஜா நானே மந்திரி படத்தில் இடம்பெற்ற ’மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே’ பாடல். பலரது உள்ளங்கள்ளை இன்றுவரை மயக்கி வைத்திருக்கும் பாடல் அது. இந்த பாடலில் தனது குரலில் அவ்வளவு வித்தியாசம் காட்டியிருப்பார் ஜெயச்சந்திரன்.
இவர்களது கூட்டணியில் உச்சம் தொட்ட படம் என்றால் வைதேகி காத்திருந்தாள் தான். அந்தப் படத்திற்காக அவர் பாடிய மூன்று பாடல்களுமே தமிழ்ச் சமூகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் பாடல்கள். ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பாடலும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி பாடலும் இன்றுவரை கேட்பவர்களை மெய்மறக்கச் செய்யும் பாடல்கள். இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ பாடல் இன்னொரு தனி ரகமான பாடல். ஒரு பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை அப்படி வெளிப்படுத்தி இருப்பார்.
தற்கால தலைமுறைவரை தாலாட்டுபவர்
அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் இடம்பெற்ற பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே பாடலும், கடலோர கவிதைகள் படத்தில் இடம்பெற்ற கொடியிலே மல்லிகப்பூ பாடலும் காதல் தேன் விருந்து. தென்றலாய் வருடிவிடும் பாடல்கள் அவை. இளையராஜா - ஜெயச்சந்திரன் கூட்டணியில் அமைந்த மற்றொரு மகத்தான பாடல் தெய்வ வாக்கு படத்தில் வரும் ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை பாடல்.
இளையராஜாவை தாண்டி ஏ.ஆர்.ரஹ்மான், தேவா தொடங்கி ஜிவி பிரகாஷ் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அவர், கிழக்குச் சீமையிலே படத்தில் கத்தாழ காட்டு வழி, மே மாதம் படத்தில் என் மேல் விழுந்த மழைத்துளியே, பூவே உனக்காக படத்தில் சொல்லாமலே யார் பார்த்தது, அவள் வருவாளா படத்தில் இது காதலின் சங்கீதம், வானத்தைப் போல படத்தில் காதல் வெண்ணிலா, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே, கிரீடம் படத்தில் கனவெல்லாம் பலிக்குதே போன்ற முத்தான பாடல்களை தமிழுக்கு கொடையாக கொடுத்தவர். தேன் கலந்த குரலால் நம் மனதை வருடிக் கொடுத்த அவர் இன்று நம்முடன் இல்லை. புதிய தலைமுறை சார்பாக அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.