நடிகை ஸ்ருதிஹாசன், அமெரிக்க டி.வி.தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், இசை ஆல்பங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க டிவி சேனல் ஒன்றில் வெளியாகும் சீரியலில் அவர் நடிக்க இருக்கிறார். ‘டிரெட்ஸ்டோன்’ (Treadstone) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் அவர், டெல்லியில் வசிக்கும் நீரா படேல் என்ற கேரக்டரில் நடிக்கிறார். ஓட்டல் பணியாளராக வேலை பார்த்துக் கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஜெரேமி இர்வின், பிரையன் ஜே.ஸ்மித், ஒமர் மெட்வாலே, டிரேசி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜூலை முதல் வாரம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்-டில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. இதுபற்றி ஸ்ருதிஹாசன் கூறும்போது, “அமெரிக்காவில் எனக்கு சிறந்த ஏஜென்டுகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த ரோலுக்கு என்னை அனுப்பினார்கள். ஆடிஷனுக்காக சென்றிருந்தேன். நிறைய கற்றுக்கொண்டேன்.
இந்தத் தொடரின் ஷூட்டிங் உலகம் முழுவதும் நடைபெற இருக்கிறது. அதனால் உற்சாகமாக இருக்கிறேன். இதில் அதிகமாக ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெறுகிறது. இதற்காக பயிற்சி எடுத்து வருகிறேன். இந்தத் தொடர், என்னை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

