”வெளிநாடு செல்ல வேண்டுமென்றால்..” - நடிகை ஷில்பா ஷெட்டிக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டிஷன்!
ஷில்பா ஷெட்டியை அமெரிக்கா செல்ல அனுமதிக்க வேண்டும் என்றால் ரூ.60 கோடியை செலுத்த மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் 2015ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி தம்பதிக்கு தொழிலை விரிவுபடுத்த ரூ.60 கோடி கொடுத்துள்ளார். ஆனால் அந்தப் பணத்தை ராஜ் குந்த்ராவும், அவரது மனைவியும் தங்களது தொழிலை விரிவுபடுத்த பயன்படுத்தாமல் சொந்த தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி தீபக் கோதாரி கேட்டார். ஆனால் ராஜ் குந்த்ரா தம்பதி பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தீபக் கோதாரி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஷில்பா ஷெட்டியை அமெரிக்கா செல்ல அனுமதிக்க வேண்டும் என்றால் ரூ.60 கோடியை செலுத்த மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கி உள்ளது.
தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்தரா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல அனுமதி கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மனு தாக்கல் செய்தார். தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்துசெய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் ஷில்பா ஷெட்டி மனு அளித்தார். இம்மனு மீதான விசாரணையின்போது, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் அல்லது வேறு எந்த வெளிநாட்டு இடத்திற்கும் பயணிக்க விரும்பினால், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் முதலில் ரூ.60 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அவர்கல் பயணம் செய்ய அனுமதி மறுத்த நீதிமன்றம், அவர்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் சுற்றறிக்கையை (LOC) இடைநிறுத்தவும் மறுத்துவிட்டது. நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், அக்டோபர் 25 முதல் 29 வரை திட்டமிடப்பட்ட யூடியூப் நிகழ்வுக்காக கொழும்புக்குச் செல்ல அனுமதி கோரிய அவரது கோரிக்கையை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எந்தவொரு பயண அனுமதியையும் கோருவதற்கு முன்பு தம்பதியினர் முதலில் 60 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என குறிப்பிட்டது. இந்த வழக்கு அடுத்து அக்டோபர் 14ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.