கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல மாடல் அழகி!
கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று, ஷீத்தலின் சகோதரி நேஹா , தனது சகோதரி சீத்தலை காணவில்லை என்று பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, நேற்றைய தினம் (16.6.2025) சோனிபட் நகரின் கார்கவுடா பகுதி கால்வாய் ஒன்றிலிருந்து ஷீத்தல் கழுத்து அறுக்கப்பட்டநிலையில், சடலமாக மீட்கப்படுள்ளதாக ஹிரியானா போலீஸார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் திடுக்கிடும் தகவல்களும், கொலை செய்தது யார் என்ற பகிரங்க பின்னணியும் வெளிவந்துள்ளது.
இறந்த ஷீத்தல் என்கிற சிம்மி சவுத்ரி. ஹரியானா இசைத் துறையில் பணியாற்றிய ஒரு மாடல் ஆவார் . மாடலிங் வாழ்க்கைக்கு வருவதற்கு முன்பு, ஷீத்தல் கர்னாலில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார்.
ஷீத்தல் பணிப்புரிந்த ஓட்டலின் உரிமையாளர் சுனில் என்பவருக்கும் இவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. இது காதலாகவும் மாறியதாக கூறப்படுகிறது . பின்னர், சுனிலை திருமணம் செய்து கொள்ள ஷீத்தல் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், சுனிலுக்கு திருமணமாகி ஏற்கெனவே, இரண்டு குழந்தைகள் இருப்பதை , தாமதமாக அறிந்துகொண்ட சீத்தல், திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி, தான் வேலை செய்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்துள்ளார். ஆனால், சுனில் அவரை தொடர்ந்து திருமணம் செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஷீத்தல் ஒரு ஆல்பம் படப்பிடிப்பிற்காக பானிபட்டில் உள்ள அஹார் கிராமத்திற்கு கடந்த சனிக்கிழமை வந்துள்ளார். இதனை அறிந்துகொண்ட சுனில், இரவு 10:30 மணியளவில், ஷீத்தலை சந்திப்பதற்காக அங்கு வந்துள்ளார். அவர் ஷீத்தலை தனது காரில் அழைத்துச் சென்றநிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் தொடங்குவதற்கு முன்பு இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், 1.30 மணியளவில் ஷீத்தல் தனது சகோதரிக்கு போன் செய்து சுனில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். பின்னர் ஷீத்தலின் போன் கட்டானதாக சகோதரி நேஹா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பானிபட் காவல் நிலையத்தில் நேஹா அளித்துள்ள புகாரில், ”ஜூன் 14 ஆம் தேதி இரவு ஷீத்தல் எனக்கு போன் செய்து அவரது முன்னாள் நண்பர் சுனில் என்பவர் ஷீத்தலின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறினார். அதன்பிறகு அவளுடைய தொலைப்பேசி துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. சுனில்தன் என் சகோதரியை கொன்றதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். ” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸில் சுனில் தெரிவிக்கையில், தனது கார் விபத்தில் சிக்கிவிட்டதாகவும், அப்போது கார் கால்வாயில் விழ, ஷீத்தல் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக போலீஸில் தெரிவித்துள்ளார்.
ஆனால், போலீஸார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், சீத்தலை கொன்றது தான்தான் என்று சுனில் ஒப்புக்கொண்டார். ஆனால், எதற்காக கொலை செய்தார் என்ற காரணம் தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில் ஹரியானா போலீஸார் சுனிலை கைது செய்துள்ளனர்.