இணையத்தில் கசிந்த சிக்கந்தர் படம்.. 91 கோடி நஷ்டம்; பேசுபொருளான தயாரிப்பு நிறுவனத்தின் முடிவு!
ஊரே மதிக்கும் ராஜாவாக வாழும் சஞ்சய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் சல்மான் கான், அவர் தன் மனைவிக்காக கையிலெடுக்கும் ஒரு மிஷனால் என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதே படத்தின் கதை. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே திரையரங்கில் வெளியானாலும் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
விமர்சன ரீதியிலும் படத்திற்கு பின்னடைவே. இதில் மேலும் ஒரு இடி விழுந்தது போல சட்டவிரோதமாக இப்படத்தின் HD VERSION, படம் வெளியான நாளிலேயே இணையத்தில் வெளியானது. ஒருபுறம் படத்தின் வரவேற்பு குறைந்ததால் வசூல் பாதித்தது. இன்னொரு புறம் இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியானதும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதை தடுத்தது. ஒரு மாதம் கழித்து இப்படம் மே 25ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.
ஒட்டு மொத்தமாக இப்படம் இந்திய திரையரங்கில் 105 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் இந்த சிக்கந்தர் தயாரிப்பு நிறுவனமான Nadiadwala Grandson Entertainment-க்கு நஷ்டத்தை தான் ஏற்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள முடிவு பேசு பொருளாகியிருக்கிறது.
இந்நிறுவனத்தின் வரவு செலவை கணக்கிட்ட Ernst & Young ஆடிட்டிங் நிறுவனம், சிக்கந்தர் படத்தின் இணைய பதிவேற்றத்தால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கணக்கிட்டது. கிட்டத்தட்ட 91 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே படத்தயாரிப்பு நிறுவனம் Sajid Nadiadwala, இந்த நஷ்டத்தை ஈடுகட்ட இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய திட்டமிட்டுள்ளது என தகவல்.
மேலும், தியேட்டர் வெளியீட்டில் இல்லாத சில காட்சிகள் இணையத்தில் வெளியான சிக்கந்தர் படத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் சொல்லப்படுகிறது. சென்சார் வாங்கிய பிறகு தான் படம் வெளியே கசிந்திருக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.
ஆனால், பட வெளியீட்டு அன்றே, அப்படத்தின் HD VERSION இணையத்தில் வெளியானது குறித்து பாலிவுட்டின் பல மூத்த திரைத்துறையினர், தாயரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வரவும் வலியுறுத்துகிறது IMPPA (The Indian Motion Picture Producers’ Association).
இந்த சூழலில் Sajid Nadiadwala இன்ஷூரன்ஸ் மூலம் காப்பீட்டு தொகை கோர இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் விளைவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்