நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான உணவகத்தில் வருமான வரித்துறை சோதனை.. என்ன நடந்தது?
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் "Savoury sea shell" என்ற பிரபல உணவகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரபு நாடுகளிலும் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த குன்ஹி மூசா.
'அரேபியன்' உணவுகளுக்கு பெயர் போன இந்த உணவகங்களில் இன்று காலையில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் குறிப்பாக, கேரளா வருமான வரித்துறை அதிகாரிகள் உணவக நிறுவனத்தின் தலைமையிடம் மற்றும் உரிமையாளர்கள் அதன் கிளைகள் என அனைத்து இடங்களில் சோதனையை மேற்கொண்டனர்.
நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான உணவகத்தில் சோதனையா?
இன்று காலை முதல் கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில், கேரள வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதன் பேரில் சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னையில் 'சீ ஷெல்' உணவக கிளைகளில் சோதனை நடத்தினர்.
சென்னை அண்ணா நகர், வேளச்சேரி, பெருங்குடி இந்திரா நகர், துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி, துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை ஆகிய 5 இடங்களில் சோதனை நடந்தது..
இந்த பிரபல உணவகத்தின் ஒரு கிளையை நடிகர் ஆர்யா நடத்தி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பே அதனை விற்பனை செய்துள்ளார்.
இந்த நிலையில், இந்த பிரபல உணவகம் கடந்த ஐந்து வருடங்களில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளில் ஏய்ப்பு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ள்ளனர்.
சோதனையின் முடிவில் கணக்கில் வராத பணம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த உணவகத்தின் ஒரு கிளையை நடிகர் ஆர்யா நடத்தி வந்ததால் இன்று காலை நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.. இந்த நிலையில் நடிகர் ஆர்யா அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.