”அனைவரின் இதயமும் உடைந்துவிட்டது” - ஸ்டண்ட் மாஸ்டர் மரணத்திற்கு பா.ரஞ்சித் இரங்கல்
’வேட்டுவம்’ திரைப்படப் படப்பிடிப்பு நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் நடைபெற்றது. அப்போது சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் காரில் இருந்து குதித்தபோது தவறி விழுந்ததில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
படப்பிடிப்பில் மோகன்ராஜ் பங்கேற்ற சண்டை காட்சிகள் வெளியான நிலையில், இது தொடர்பாக அலட்சியமாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளில் பா.ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நீலம் புரொடக்ஷன் சார்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து விதிகளையும் பின்பற்றியே காட்சி படமாக்கப்பட்டது என்றும், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த அறிக்கையில் , " ஜூலை 13 ஆம் தேதி காலை, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் "வேட்டுவம்" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக ஒரு திறமையான ஸ்டண்ட் கலைஞரும் நீண்டகால சக ஊழியருமான திரு. மோகன் ராஜை நாங்கள் இழந்திருக்கிறோம். அவரது மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் மோகன் ராஜ் அண்ணாவை ஒரு சக ஊழியராகவும் நண்பராகவும் அறிந்த ,நேசித்த அனைவரின் இதயமும் உடைந்துவிட்டது.
சரியாக திட்டமிடப்பட்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளோடுதான் படப்பிடிப்பின் அன்றைய நாள் தொடங்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத மரணத்தில் வந்து முடிந்தது. இது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் மனவேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. மோகன் ராஜ் அண்ணா மீது ஸ்டண்ட் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
அவர் ஸ்டண்ட் செய்வதில், மிகவும் அனுபவம் வாய்ந்தவர், சாதனையாளர். எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயனின் நிபுணத்துவத்தை நாங்கள் நம்பியிருந்தோம். மேலும், இதைப் பாதுகாப்பாக வைக்க தேவையான ஒவ்வொரு நெறிமுறையையும், ஒவ்வொரு விதிமுறைகளையும் பின்பற்றினோம். இப்படி எல்லா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் நாங்கள் இவரை இழந்துவிட்டோம் . அவருக்கு எப்போதும் எங்கள் மரியாதை, அன்பு மற்றும் வணக்கம் எப்போதும் இருக்கும். கணவர், தந்தை, நம்பமுடியாத ஸ்டண்ட் கலைஞர் மற்றும் ஒரு அழகான மனிதரான மோகன் ராஜ் அண்ணாவின் இழப்புக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு அற்புதமான ஸ்டண்ட் கலைஞராக அவர் எப்போதும் நம் நினைவில் நிலைத்திருப்பார்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் நடந்த படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்த விவகாரத்தில், படப்பிடிப்பு உரிய அனுமதியின்றி நடந்திருப்பதாக எஸ்பி செல்வக்குமார் தகவல் அளித்துள்ளார்.
10,11,12 நாட்கள் என 3 நாட்கள் அனுமதி பெற்றுவிட்டு நான்காம் நாள் படப்பிடிப்பு நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 13 ஆம் தேதி நடந்த நான்காம் நாள் நடந்த படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்துள்ளார். முழு பிரேத பரிசோதனை விவரம் 10 -15 நாட்கள் ஆகும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, உடற்கூராய்வு அறிக்கை கிடைத்தபிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி செல்வக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.