’இந்திய சினிமாவை காப்பாற்றுவதே தெலுங்கு ரசிகர்கள் தான்..’ விவாதத்தை கிளப்பிய ராணா டகுபதி!
இந்திய சினிமாவின் மொத்த வருவாயில் 70% பங்களிப்பு தெலுங்கு ரசிகர்களிடமிருந்து வருவதாக நடிகர் ராணா டகுபதி கூறியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற சினிமாத்துறை ரசிகர்கள் இதை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
செய்தியாளர் - M.மீரா
இந்திய சினிமாவின் மொத்த வருவாயில் 70 சதவீதம் தெலுங்கு ரசிகர்களின் பங்களிப்பு என நடிகர் ராணா டகுபதி கூறியிருப்பது திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 31-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதி பங்கேற்றார். இந்நிகழ்ச்சி திரைப்படத் துறை, படைப்பாற்றல் பொருளாதாரம், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து அமைந்திருந்தது.
அப்போது பேசிய அவர், இந்திய மக்கள் தொகையில் தெலுங்கு பேசும் மக்கள் சுமார் 10 சதவீதம் மட்டுமே உள்ளனர். ஆனால், இந்தியத் திரைப்படத் துறையின் மொத்த வருவாயில் 70 சதவீதத்தை அவர்களே வழங்குகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், மற்ற மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களைக்கூட தெலுங்கு ரசிகர்கள் தங்களது சொந்த மொழிப் படங்களைப் போலவே ஆதரித்துப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, பாலிவுட் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவரது கணக்கீடு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேநேரத்தில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் 2024-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியத் திரையரங்கு வசூலில் தெலுங்குப் படங்களின் பங்கு சுமார் 19 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, விசாகப்பட்டினத்தைத் திரைப்படத் தயாரிப்பு மையமாக மேம்படுத்த ஆந்திர அரசுடன் இணைந்து பணியாற்றவும் ராணா விருப்பம் தெரிவித்துள்ளார்.

