\
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸின் ‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்துடன் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நெல்சனின் ‘பீஸ்ட்’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களால், படப்பிடிப்பு தாமதமானது.

நெல்சன் - ரஜினியின் கூட்டணி கைவிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியானநிலையில், அதனை நடிகர் ரஜினிகாந்த் மறுக்கும்வகையில் அவரது ட்விட்டர் புரொபைலும் மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த பல மாதங்களாக கதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தநிலையில், நேற்று முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகமலேயே இருந்தநிலையில், சன் பிக்சர்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் மீண்டும், ரஜினியுடன் இணைந்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘பாபா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நீலம்பரியாகவே ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். இதேபோல் ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். அத்துடன் வசந்த் ரவி, விநாயகன் போன்றோரும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது போல், இந்தப் படத்தில் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com