”கருப்பாக இருந்ததால் கம்மி சம்பளமே கொடுத்தாங்க” - மாடலிங் நினைவுகளை பகிர்ந்த இந்தி நடிகை!

”கருப்பாக இருந்ததால் கம்மி சம்பளமே கொடுத்தாங்க” - மாடலிங் நினைவுகளை பகிர்ந்த இந்தி நடிகை!
”கருப்பாக இருந்ததால் கம்மி சம்பளமே கொடுத்தாங்க” - மாடலிங் நினைவுகளை பகிர்ந்த இந்தி நடிகை!

தென்னிந்திய படங்களின் ஆதிக்கம் பாலிவுட்டிலும் காலோச்சி வருவதால், அண்மைக்காலமாக இந்தியில் வெளியாகும் படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஹிட் அடிக்காததால் பாலிவுட் படங்கள் மீதான மக்களின் எதிர்ப்பார்ப்பு குறையத் தொடங்கியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

மேலும், பாலிவுட்டில் நடக்கும் நெப்போடிசம் போன்றவை குறித்து நடிகர் நடிகைகள் பலரும் கருத்துகளும் பேச்சுகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதேபோல மாடலிங் துறையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக பல நடிகைகளும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ரக்‌ஷா பந்தன் படத்தில் நடித்திருந்த ஸ்மிருதி ஸ்ரீகாந்த் மாடலிங் துறையில் தனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.

அப்போது ரக்‌ஷா பந்தன் படத்தில் லக்‌ஷ்மி என்ற கேரக்டர் தனது நிறம் காரணமாக மணமகனைக் கண்டுபிடிக்க போராடுகிறார். இதனால் படத்திற்கு ஏதேனும் பின்னடைவை கொடுக்குமா? என கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஸ்மிருதி ஸ்ரீகாந்த், “எனக்கு நிஜத்தில் கூட நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மை இருக்கிறது. ஆனால் கதாபாத்திரத்திற்காக, என் தோல் மேலும் இரண்டு நிலைகளுக்குக் குறைக்கப்பட்டது. சிறு வயதிலிருந்து நிறம் தொடர்பான பல கேலி கிண்டல்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

மேலும், ரக்‌ஷா பந்தனில் உள்ள லக்‌ஷ்மி கேரக்டரில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள ஒரு வசனம்தான் காரணமாக இருந்தது. அது, “சூரிய வெளிச்சத்தில் வெளியே செல்லாதே உன்மேனி கருத்துவிடும்” என்று வரும் டையலாக்தான் என்னை ஈர்த்தது. ஆனால் நான் ஸ்கிரிப்டைப் படித்தபோது, அந்தக் கதாபாத்திரத்தில் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர் தனது கருத்த தோலின் மீதும் நிறத்தின் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பவர். லக்ஷ்மி, மீண்டும் கருப்பு வந்துவிட்டது என்பாள். தன் நிறத்தை விரும்புகிறவளாக இருப்பாள். தன்னை கரீனா கபூராகவே எண்ணுவாள்” என ஸ்மிருதி ஸ்ரீகாந்த் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சினிமாத்துறையில் நிற வேறுபாடு இன்னும் பார்க்கப்படுகிறதா என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, “ஆடிஷனின் போது சில நேரங்களில், தோலின் நிறத்தின் அடிப்படையில்தான் வகைப்படுத்துகிறார்கள். சில இடங்களில், 'எங்களுக்கு அழகாக, ஃபேராக இருப்பவர்கள் மட்டுமே வேண்டும்' எனவே கூறுவார்கள். ஆனால் அது கதாபாத்திரத்தின் கோரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தாக இருக்கும். 

"ஆனால் ஒரு முறை நான் ஒரு மாடலிங் பணியில் இருந்தபோது மிகவும் மோசமாக உணர்ந்தேன். ஒரு பிராண்டிற்கான சில நிகழ்வுகள் இருந்தன. அதற்காக ஆடிஷனிலும் தேர்வானேன். அந்த பணிக்கு இரண்டு பகுதிகள் இருந்தன, இரண்டிற்கும் என்னை தேர்வு செய்தார்கள்.

என்னோடு கூட வந்த மற்ற பெண்களெல்லாம் ஒரு பகுதிக்கு மட்டுமே தேர்வானார்கள். எனவே, எனக்கான சம்பளத்தை உயர்த்தி கேட்டேன். ஆனால், அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்தது வருத்தம்தான். அவர்கள் டஸ்க்கி நிறத்தில் இருக்கும் பெண்களை பொதுவாக தேர்வு செய்ய மாட்டார்கள். ஆனால் உன்னை எடுத்திருக்கிறார்கள். கொடுப்பதை வாங்கிக்கொள்ளும்படியும் கூறினார்கள். இது நடந்து கிட்டத்தட்ட 5-6 ஆண்டுகள் இருக்கும்.” என ஸ்மிருதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com