’ஜெயிலர் 2’ | நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல்.. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?
செய்தியாளர் - M.மீரா
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர் 2’. கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ’ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா, ஜாக்கி ஷெராஃப், ஹிருத்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகிபாபு, சுராஜ், நமோ நாராயணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி, ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள ’ஜெயிலர் 2’, பழைய ரஜினி படங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?
இதற்கிடையே, தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையைத் தொடர்ந்து ’ஜெயிலர் 2’ முதல் நாளிலேயே சுமார் ரூ.23.50 கோடி முதல் ரூ.25 கோடி வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, முதல் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.40 கோடியைக் கடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாவது நாளான சனிக்கிழமையும் படத்தின் வசூல் அதிகரித்தது. அன்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் ரூ.23 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, நான்காவது நாளிலும் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், முதல் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ’ஜெயிலர் 2’ படத்தின் மொத்த வசூல் ரூ.70 கோடியைக் கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தமிழ்நாட்டின் நான்கு நாள் வசூல் குறித்த துல்லியமான அதிகாரப்பூர்வத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டைத் தாண்டியும் ’ஜெயிலர் 2’ திரைப்படம் வசூலில் வெற்றி கண்டுள்ளது. வெளியான முதல் நான்கு நாட்களின் முடிவில், இந்திய அளவில் இப்படம் ரூ.234 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.425 கோடியைக் கடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

