‘வேட்டையன்’, ‘லால் சலாம்’ குறித்து அடுத்தடுத்து வெளியான அப்டேட்கள்!
இன்று நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் [12.12.2023]. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் ரஜினிகாந்திற்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான அதற்கு வேட்டையன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்தப்படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல முக்கிய பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று அவருடைய 170 வது படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் டீசரில் “குறி வச்சா இரை விழணும்” என்ற வசனம் மட்டும் இடம் பெற்றுள்ளது. மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடனே படம் இருக்கிறது.
வெளியாகியுள்ள டீசர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தன் மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. அதன் போஸ்டரை பகிர்ந்து, இன்று அதன்மூலமும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது லைகா.
லால் சலாம் திரைப்படம், பொங்கல் 2024-ல் 5 மொழிகளில் (தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா) வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலவே லால் சலாமின் படக்குழு சார்பில், ரஜினி பிறந்தநாள் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.