வெளியானது காலா: அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்தை காண அதிகாலையிலேயே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். படத்தை பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடினர். மதுரையில் ரஜினி ரசிகர்கள் காலா படத்திற்காக கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேள தாளத்துடன் நடனமாடி தங்களது ஆதரவை ரசிகர்கள் தெரிவித்தனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ரஜினி மக்கள் மன்றத்தினரும் திரையரங்குகள் முன்பு பேனர்கள் வைத்துள்ளனர். வழக்கத்துக்கு மாறாக ரசிகர்கள் அதிக உற்சாகத்துடன் படத்தை காண திரையரங்குகளில் குவிந்துள்ளனர்.
இதனிடையே, காலா திரைப்படத்தை ஃபேஸ்புக்கில் நேரலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். காலா திரைப்படம் வெளிநாடுகளில் நேற்று வெளியாகியுள்ள நிலையில், படம் ஃபேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்டது. இதைக் கண்டு திரைத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பலரும் இதற்கு கண்டனத்தையும் அதிர்ச்சியையும் ட்விட்டரில் பதிவிட, நடிகர் சங்கச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், ஃபேஸ்புக்கில் காலா திரைப்படத்தை வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். படம் சிங்கப்பூரில் இருந்து லைவ் செய்யப்பட்டதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் 130 திரையரங்குகளில் திரையிடப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்கங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், படம் திட்டமிட்டப்படி திரையிடப்படுகிறது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி காலா படத்தை 130 திரையரங்குகளில் வெளியிட விநியோகஸ்தர் கானக்புரா ஸ்ரீனிவாஸ் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.