ரஜினி - கமல் இணையும் படம்.. இயக்கப் போவது யார்? லோகேஷுக்கு வாய்ப்பு உண்டா?
கமலுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன். ஆரம்ப காலங்களில் இருவரும் நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினியின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' படத்திலேயே கமல் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் `தப்பு தாளங்கள்', `மூன்று முடிச்சு', `அவர்கள்', பதினாறு வயதினிலே', `இளமை ஊஞ்சல் ஆடுகிறது எனப் பல படங்களில் இணைந்து நடித்தனர். தமிழில் 1979இல் வெளியான `நினைத்தாலே இனிக்கும்' படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி இணையாமல் இருந்தது. `தில்லு முல்லு' படத்தில் கமல் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது, இந்தியில் அமிதாப் பச்சனுடன் ரஜினி - கமல் இணைந்து நடித்த `Geraftaar' போன்ற படத்திற்குப் பிறகு முற்றிலுமாக இக்கூட்டணி பிரிந்தது. அதன்பின் தங்களது தனித்தனி படங்களில் கவனம் செலுத்தி வந்தனர் ரஜினியும், கமலும். இந்தச் சூழலில் ரஜினி - கமல் கூட்டணி தமிழில் 46 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளது என பேசப்பட்டது. சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் இந்த செய்தியை கமல்ஹாசன் உறுதியும் செய்தார்.
இதுகுறித்து கமல்ஹாசன் பேசியபோது, "நாங்க இணைந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இத்தனை நாள் விரும்பிப் பிரிந்திருந்தோம். ஏனெனில், ஒரு பிஸ்கட்டை ரெண்டு பேரும் பிரித்துக் கொண்டோம். பின்பு ஆளுக்கு ஒரு பிஸ்கட் வேண்டும் என ஆசைப்பட்டோம். அதை வாங்கி நன்றாகச் சாப்பிட்டோம். இப்போது மறுபடியும் பாதி பிஸ்கட் போதும் என முடிவு செய்துவிட்டோம். எங்கள் இருவருக்குமிடையே போட்டி என்ற எண்ணத்தை நீங்கள்தான் உருவாக்கினீர்கள். நிஜத்தில், எங்களுக்கு அது போட்டி அல்ல; வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். நாங்கள் இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைவது வியாபாரரீதியாக ஆச்சர்யமாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு, இது எப்போதோ நடக்க வேண்டிய ஒன்று. இப்போது நடந்திருப்பதிலே நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" எனக் குறிப்பிட்டார் கமல்.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்க உள்ளார் என சொல்லப்பட்டது. இது லோகேஷின் 7வது படமாகவும், ரஜினியின் 173வது படமாகவும், கமல்ஹாசனின் 235வது படமாகவும் உருவாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் சமீபகாலமாக இந்தப் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்ற தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கிய `கூலி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில், இந்த பேச்சுகள் இன்னும் தீவிரமாக பரவின.
இப்போது அதற்கு ஏற்றார்போல் இன்று ரஜினிகாந்த் விமான நிலையத்தில் அளித்த பேட்டியும் உள்ளது. நீண்டகாலத்திற்கு பிறகு ரஜினி - கமல் இணைந்து படத்தில் நடிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட, "அடுத்ததாக ராஜ்கமல் - ரெட் ஜெயண்ட் இணையும் படத்தில் பணியாற்றுகிறேன். இன்னும் அதற்கான இயக்குநர் முடிவாகவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை. அதற்குச் சரியான கதையும், கதாபாத்திரமும் கிடைக்க வேண்டும். கிடைத்தால் நடிப்போம்" என பதில் அளித்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் பல வருட கனவு. அது நிறைவேறும் என்ற நம்பிக்கை கிடைத்திருந்தாலும், அதனை யார் இயக்கப் போகிறார் என்ற உறுதியான தகவல் எப்போது வரும் என காத்திருக்கிறது சினிமா உலகம்.