"ராஜமௌலி கதை சொல்ல துவங்கிய 5 நிமிடங்களில்..." - ப்ரித்விராஜ் | Prithviraj | Varanasi | SS Rajamouli
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகிவரும் படம் `வாரணாசி'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 100 அடி திரை அமைக்கப்பட்டு, அதில் படத்தின் தலைப்பு வீடியோவை திரையிட்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ப்ரித்விராஜ் "கடந்த 25 வருடங்களாக பல மொழிகளில் நடித்து வருகிறேன். ஆனால் இப்படியான ஒரு சினிமா அறிமுக விழா எங்கும் பார்த்ததில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் பணியில் இருந்த போது ராஜமௌலியிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. `ஹாய் ப்ரித்வி, நான் ராஜமௌலி. என் அடுத்த படத்தின் வில்லன் பாத்திரம் மிக அழகாக வந்து கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் நடிக்க விரும்புகிறீர்களா?' இதைத்தான் மெசேஜாக அனுப்பி இருந்தார். அந்த மெசேஜ் இன்னும் என்னிடம் இருக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு நான் அவரது அலுவலகத்திற்கு சென்றேன்.
என் நண்பன் பிரபாஸ் அடிக்கடி கூறிய புகழ்பெற்ற `ராஜமௌலி கதை சொல்லல்' துவங்கியது. அது ஆரம்பித்த 5 நிமிடங்களிலேயே நான் மிரண்டு போனேன். அடுத்த 3 மணிநேரம் நான் ஒரு நடிகனாக கதையை கேட்கவில்லை. புதிதாக வரும் காமிக் புக்கின் கதையை தெரிந்து கொள்ளும் ஒரு சிறுவனாக உணர்ந்தேன். பிரம்மாண்டம், தொலைநோக்கு பார்வை, லட்சியம் என எல்லாம் அதில் எனக்கு தெரிந்தது. என்னை மூர்ச்சையாக்கியது என்ன என்றால், மிக துணிச்சலான அவரது கற்பனை திறன். எப்படி ஒருவரால் இப்படி சிந்திக்க முடியும்? இப்படியான காட்சிகளுக்கான உந்துதல் எங்கிருந்து வருகிறது. ஐந்து நிமிடம் கதை கேட்டு நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படத்தை முதன்முறை பார்க்கும் போது நீங்களும் அதையே உணர்வீர்கள்.
பல நடிகர்களுக்கும் ராஜமௌலி படத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் அவர் உருவாக்கியத்திலேயே மனதளவிலும், உடல் அளவிலும் கடினமான ஒரு பாத்திரத்தில் நான் பொருந்துவேன் என என்னை நம்புகிறார். அந்த நம்பிக்கைக்கும், வேலை என்ற பெயரில் செய்யும் டார்ச்சருக்கும் நன்றி சார்.
என்னுடைய நினைவு சரி என்றால், நான் முதன் முதலில் தியேட்டரில் பார்த்த தெலுங்குப் படம் `போக்கிரி'. அப்போதிருந்து இப்போது வரை, உங்கள் பாரம்பரியத்தை நீங்கள் தொடரும் விதம், உங்களுக்கான மரபை உருவாக்கிய விதம் உத்வேகம் தரக்கூடியது. உங்களின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு, நீங்கள் இந்தப் படத்திற்கும், இந்தப் படம் உங்களுக்கும் தகுந்ததாக அமைந்திருக்கிறது. ப்ரியங்கா சோப்ரா முன்பே சொன்னது போல நான் உங்களது ரசிகன். பர்ஃபி படத்தில் நீங்கள் ஜில்மில்லாக நடித்து, இந்திய நடிகர்களின் மிகச்சிறந்த நடிப்பில் ஒன்று. இப்போது நீங்கள் மந்தாகினி ஆக மாறுவதை நேரில் பார்ப்பது மகிழ்ச்சி.
இப்படம் இந்திய சினிமாவின் மிக உயரிய லட்சியம். இதில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு உயரத்தை நோக்கி செல்ல உழைக்கிறார்கள். ஆனால் அதனை அடைய பார்வையாளர்கள் எங்களை நம்ப வேண்டும். இந்தப் படத்தின் மூலம் ராஜமௌலி மீண்டும் ஒருமுறை இந்தியா சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு செல்வார். இந்த முறை இன்னும் பெரியதாக, சிறப்பாக மற்றும் தைரியமாக" என்றார்.

