’பொன்னியின் செல்வன் 2’ பாடல் காப்புரிமை விவாகரம்.. ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு!
’பொன்னியின் செல்வன்-2’ படத்தின் 'வீர ராஜா வீர' பாடல், தாகர் குடும்பத்தின் 'சிவ ஸ்துதி' பாடலின் மெட்டைப் போன்று இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம், ஏ.ஆர். ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவிட்டது. தாகர் குடும்பத்தின் பாரம்பரிய பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
'பொன்னியின் செல்வன்-2' படத்தில் வரும் 'வீர ராஜா வீர' பாடல், தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் தனது மாமனார் ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 'சிவ ஸ்துதி' பாடலின் மெட்டைப் போன்று இருப்பதாகக் கூறி பத்ம ஸ்ரீ விருது பெற்ற துருபத் இசைக்கலைஞர் பையாஸ் வாசிபுதீன் தாகர் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "இந்தப் பாடல் 1991-லேயே பலரால் பாடப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எங்களது பதிப்பிற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது ஒரு பாரம்பரிய மெட்டு” என்று வாதிட்டார். இதையடுத்து, வாசிபுதீன் தாகன் தரப்பில் இருந்து ”நாங்கள் ராகத்திற்கு உரிமை கோரவில்லை. எனது தந்தை உருவாக்கிய குறிப்பிட்ட இசை அமைப்பிற்கு மட்டுமே உரிமை கோருகிறோம்” என்று வாதிடப்பட்டது.
தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், , "பாரம்பரிய இசைக்கலைஞர்கள் புகழுக்காகவும் கௌரவத்திற்காகவும் மட்டுமே செயல்படுகிறார்கள். எனவே, 'தாகர்வாணி' பாரம்பரியத்தின் பங்களிப்பை ஏ.ஆர். ரஹ்மான் ஏதோ ஒரு வகையில் அங்கீகரிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ராகங்கள் பொதுவானவை என்றாலும், ஒரு குறிப்பிட்ட மெட்டை உருவாக்கியதில் தாகர் குடும்பத்திற்குப் பங்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள். இந்தமாதிரியான இசை குடும்பங்கள் சாஸ்திரிய சங்கீதத்திற்குப் பங்களிக்கவில்லை என்றால், இன்றைய நவீன பாடகர்களால் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்திருக்குமா? என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மீண்டும் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ரூ. 2 கோடி தொகையை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஏ.ஆர். ரஹ்மான் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல்கள் குறித்து தனது கருத்தைத் தெரிவிக்க ஏ.ஆர். ரஹ்மான் தரப்பிற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி, சிவ ஸ்துதி பாடலின் அடிப்படை ராகத்தை கொண்டும், ஸ்வரத்தை கொண்டு உருவானதாக கூறி "வீர ராஜா வீர" பாடலுக்கு பதிப்புரிமை 2 கோடி ரூபாய் அபாராதத் தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், ரஹ்மான் தர்ப்பில் இருந்து டெல்லி உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த டிவிசன் பெஞ்ச் ரஹ்மானுக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்திருந்தது. இந்த நிலையில் தான், பாடகர் வாசிபுதீன் தாகர் தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 கோடி ரூபாய் அபராதத்தை ரஹ்மான் தரப்பு நீதிமன்றத்தில் கட்ட உத்தவிட்டுள்ளனர்.

