“தலைவர் பெயரைக் கெடுக்கக்கூடாது என்ற பயத்தில் வேலை செய்துள்ளேன்” சந்திரமுகி 2 குறித்து ராகவா லாரன்ஸ்

"இப்படத்தில் தலைவரின் வேட்டையன் ரோல் எடுத்து செய்யும்போது அவரது பெயரைக் கெடுத்துவிடக் கூடாது என்ற பயத்துடன் தான் வேலை செய்துள்ளேன்"- ராகவா லாரன்ஸ்
Raghava Lawrence
Raghava LawrencePT Web

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி‘. இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்தது. ஹாரர் மற்றும் காமெடி கலந்து இந்தப் படத்தில் ‘வேட்டையன்’ டாக்டர் சரவணன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். அவருடன் பிரபு மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர்.

சந்திரமுகி 2
சந்திரமுகி 2@LycaProductions twitter

இந்தப் படத்தில் ரஜினியும் வடிவேலும் இணைந்து கலக்கிய காமெடி காட்சிகள் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வடிவேலு பேசிய ‘வச்சுட்டான்யா ஆப்பு’ என்ற வசனம் மறக்க முடியாததாக மாறியது. இதனை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் 890 நாட்கள் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்டது. ஒரே திரையரங்கில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் திரையிடப்பட்ட இந்தப் படம் கோலிவுட்டில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.

இந்நிலையில் சந்திரமுகி 2 ஆம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுகள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் முதல் படத்தின் இயக்குநர் பி.வாசு படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி முடித்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் போன்றோர் நடித்துள்ளனர். ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய நடிகர் வடிவேலு, “மாமன்னன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் சந்திரமுகி 2 படமும் பெரிய வெற்றி பெறும். படத்தின் முழு கதையையும் நான் கேட்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அதைவிடவும் நன்றாக மேம்படுத்தி இருந்தனர். ரஜினியின் தீவிர ரசிகர் லாரன்ஸ். லாரன்ஸ் பெரிய உழைப்பாளி” என்றார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கூறும்போது, “இப்படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு பிரம்மாண்டம் மட்டும்தான் தெரிந்தது. பிரம்மாண்டத்தை செய்வது லைகா மட்டும்தான். இப்படத்தில் தலைவரின் வேட்டையன் ரோல் எடுத்து செய்யும்போது அவரது பெயரைக் கெடுத்துவிடக் கூடாது என்ற பயத்துடன் தான் வேலை செய்துள்ளேன்” என்றார்.

நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், “இது எனது முதல் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். ராகவா லாரன்ஸ் மிகச் சிறந்த நடிகர், இயக்குநர், நடன இயக்குநர். சந்திரமுகி 1 திரைப்படத்தை பார்த்தேன். ஜோதிகா, ரஜினிகாந்த் என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com