”சினிமாவைவிட்டு வெளியேறலாம்னு இருக்கேன்” - அதிர்ச்சி கொடுத்த ’புஷ்பா’ பட இயக்குநரின் பதில்!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான ’புஷ்பா 2’ திரைப்படம், 6 நாள்களில் 1500 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்தது. எனினும், ரசிகர்களிடம் விமர்சனங்களை அதிகம் சந்தித்தது. அதேநேரத்தில், இந்தப் படத்தின் பிரைம் ஷோவிற்காகச ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்குச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனும் இதில் பாதிக்கப்பட்டு தற்போது வரை கோமாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே பெண் உயிரிழப்பு தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்கம் மீது வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். தற்போதும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு காவல் துறை விசாரணைக்கு அல்லு அர்ஜுன் ஆஜரானார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வரை பரபரப்புக்குள்ளாகி வருகிறது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனுவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், புஷ்பா படத்தை இயக்கிய சுகுமார், சினிமாவைவிட்டு வெளியேற இருப்பதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் சுகுமாரிடம், ”தாங்கள் வெளியேற இருக்கும் துறை எது” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குக் கொஞ்சமும் தயக்கமின்றி, “சினிமா” எனப் பதிலளித்தார். இது, மேடையில் அமர்ந்திருந்த நடிகர் ராம் சரண் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே சுகுமாரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிய ராம் சரண், “நீங்கள் சினிமாவிலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது” என வலியுறுத்தினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் சுகுமார் திடீரென, இப்படி பதில் அளித்ததற்குக் காரணமே ஐதராபாத்தில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவமே எனக் கூறப்படுகிறது. இதில் அரசியல்வரை தலையீடு உள்ளதால்தான் அவர் இப்படி ஒரு பதிலை அறிவித்திருக்கக்கூடும் என பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.