விபத்தில் படுகாயமடைந்த பஞ்சாபி பாடகர்.. மருத்துவமனையில் அனுமதி!
பஞ்சாபி பாடகரும் நடிகருமான ராஜ்வீர் ஜவாண்டா (35) சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாபி பாடகரும் நடிகருமான ராஜ்வீர் ஜவாண்டா (35) சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, பாடகர் ராஜ்வீர் ஜவாண்டாவின் மோட்டார் சைக்கிள் திடீரென சாலையில் வந்த தெரு கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், அருகிலிருந்து சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு தலை மற்றும் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். பின்னர் அவர் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதேநேரத்தில் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காளி ஜவாண்டே தி, மேரா தில் மற்றும் சர்தாரி போன்ற ஹிட் பாடல்களால் பிரபலமான அவர், சில பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். பாடல்கள் மூலம் பஞ்சாபி இசை ரசிகர்களிடையே வலுவான ரசிகர்களைப் பெற்றுள்ளார். பைக்குகள் மீது ஆர்வம் கொண்ட ராஜ்வீர், அதன்மூலம் மலைப் பகுதிகளில் சவாரி செய்து அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கதில் வெளியிட்டு வருவார். இந்த நிலையில் அவர் படுகாயமடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.