பஞ்சாப்| மழை வெள்ள பாதிப்புகளால் மக்கள் அவதி.. தொண்டு நிறுவனங்கள், திரைப்பிரபலங்கள் உதவி!
பஞ்சாபில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டுவர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் மிகப்பெரிய நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்புப் பணிகளை முடித்து, தற்போது புனர்வாழ்வு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுப்பது, விவசாய நிலங்களை மீட்டெடுப்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதவிக்கரம் நீட்டிய தொண்டு நிறுவனங்கள், திரைப்பிரபலங்கள்..
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பஞ்சாபி மக்கள் பல லட்சம் டாலர்கள் நிதி திரட்டி நிவாரணப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர். அழிந்துபோன கால்நடைகளுக்குப் பதிலாக புதிய கால்நடைகளை வாங்கித் தருவது போன்ற உதவிகளையும் அவர்கள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, தில்ஜித் தோசாஞ்ச், சோனு சூட், அக்ஷய் குமார் போன்ற பிரபலங்கள் நேரடியாகவும், தங்கள் அறக்கட்டளைகள் மூலமாகவும் களத்தில் இறங்கி உதவியுள்ளனர். நடிகர் தில்ஜித் தோசாஞ்ச், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பத்து கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.