கருப்பழகி பிரிவில் அழகி பட்டம்.. சான் ரேச்சல் எடுத்த விபரீத முடிவு; வெளியான அதிர்ச்சி தகவல்!
புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான சான் ரேச்சல் என்ற சங்கர பிரியா. சிறுவயதில் தனது தாயை இழந்த இவர், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். சிறுவயது முதலே நிறத்தின் காரணமாக, பல சங்கடங்களை எதிர்கொண்ட இவர், தற்போது அந்த தடைகற்கலை எல்லாம் உடைத்தெரிந்து பல்வேறு பட்டிமன்றங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பெண்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசிவந்தார்.
மாடலிங் செய்து வந்த இவர் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, Queen of madras 2022, 2023 MISS AFRICA GOLDEN INDIA போட்டியில் இரண்டாவது இடம் என பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணமும் நடந்தது.
இந்தநிலையில், ஜூன் மாதம் ரேச்சல் தூக்கத்திற்கான மற்றும் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பேஷன் நிகழ்ச்சிகள் நடத்த ரேச்சல் கடன் பெற்றதாகவும், அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்தது காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக மன அழுத்தம் ஏற்பட்டு தவித்து வந்த அவர், கடந்த 5-ஆம் தேதி, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிய ரேச்சலைக் கண்டு அதிர்ந்துபோன அவரது தந்தை காந்தி, அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சான் ரேச்சல் திடீரென மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய ரேச்சலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. அவரை மீண்டும் சிகிச்சைக்காக மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சான் ரேச்சல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.