Oho Enthan Baby Review | ஜாலியான என்டெர்டெய்னர் தான்... ஆனால்..?
Oho Enthan Baby Review (2.5 / 5)
காதலால் வாழ்க்கையும், வாழ்க்கையால் காதலும் கற்றுக் கொள்ளும் இளைஞனின் கதையே `ஓஹோ எந்தன் பேபி'
அஷ்வின் (ருத்ரா) இயக்குநராகும் முயற்சியில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கதை சொல்ல செல்கிறார். காதல் கதையில் ஹீரோ ஆர்வமாக இருப்பதால், தன் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் சந்தித்த காதல்கள் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார் அஷ்வின். ஸ்கூல் டைமில் உணர்ச்சி வேகத்தில் வரும் லவ், கல்லூரி காலத்தில் ஒரு மிஸ்அண்டர்ஸ்டேண்டிங் லவ் கடந்து, மீராவை (மிதிலா பால்கர்) சந்திக்கிறார் அஷ்வின். நட்பாக துவங்கும் இருவருக்கும் காதல் துளிர்க்க, சின்னச் சின்ன சண்டைகளும் வர, ஒருகட்டத்தில் இருவரும் பிரிய நேர்கிறது. அதன் பின் என்ன நடந்தது? அஷ்வினின் சினிமா கனவு என்ன ஆகிறது? என்பதெல்லாம்தான் `ஓஹோ எந்தன் பேபி' மீதிக்கதை.
வழக்கமான காதல் கதைதான் என்றாலும், அதில் கூடுதலாக துள்ளல் சேர்த்து, சில மெட்டா ரெஃபரன்ஸ் சேர்த்து ரசிக்க செய்திருக்கிறார்கள் எழுத்தாளர் முகேஷ் மஞ்சுநாத் மற்றும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். பெற்றோரின் சண்டைகள் பார்த்தே வளர்ந்த ஆண், வாழ்க்கையில் மிக மோசமான ஆணின் கோபத்தை பார்த்து வளர்ந்த பெண் இருவருக்குமான ரிலேஷன்ஷிப், அவர்கள் இருவருக்குமான முரண்கள் என படம் நகர்வது சிறப்பு. அறிமுக நடிகர் ருத்ரா முடிந்த வரை உணர்வுகளை கடத்த முயல்கிறார். ஜாலியான காட்சிகளில் ஓகே என்றாலும், சில எமோஷனலான காட்சிகளில் இன்னும் முயற்சி தேவை. படத்தின் ஷோ ஸ்டீலர் மிதிலா பால்கர்தான். இயல்பாக அறிமுகமாவதும், மெல்ல மெல்ல தன்னைப் பற்றி சொல்வதும், காதலில் உருகுவதும் பின்பு கோபத்தில் வெடிப்பதும் என பல்வேறு காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். சின்ன வேடம் என்றாலும் கருணாகரன் கச்சிதம். இந்தப் படத்தின் மைய கதாப்பாத்திரங்கள் அத்தனை போரையும் ஓரம் கட்டி நம்மை ஈர்க்கிறார் மிஷ்கின். அவரை வைத்து வரும் ஒவ்வொரு காமெடிக்கு க்ளாப்ஸ் பறக்கிறது.
மோசமான குடும்ப வாழ்க்கை, குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்பதை மெல்லிய சரடாக படத்தில் பயன்படுத்தியிருப்பது, அதன் மூலம் ரிலேஷன்ஷிபில் உள்ள ஜோடிக்கு இடையே வரும் முரண்களை படத்தின் முக்கிய பிரச்சனையாக கொண்டு வந்தது நல்ல ரைட்டிங். விஜய், அஜித் ரெஃபாரன்ஸ் வைப்பது, விஷ்ணு விஷாலின் சொந்த வாழ்க்கை ரெஃபாரன்ஸ் வைப்பது என சீரியஸ் விஷயங்களுக்கு இடையே பல காமெடி மொமெண்ட்டும் படத்தில் உண்டு.
ஜென்மார்ட்டின் இசையில் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ஃபுல் துள்ளல் மோடில் இருக்கிறது. ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான இளமையை அழகாக கொடுக்கிறது. படத்தின் குறைகள் எனப் பார்த்தால் இரண்டாம் பாதி படம் இன்னும் கொஞ்சம், சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம். நாயகனுக்கு வரும் காதல் எல்லாம் ஒரு ஃபேண்டசிதனமாக இருப்பது பார்வையாளர்களுக்கு கனெக்ட் இல்லாமல் செய்துவிடுகிறது. ஹீரோவின் மனமாற்றமும் இன்னும் அழுத்தமாக கொல்லப்பட்டிருக்கலாம்.
மொத்தத்தில் ஜாலியாக பார்த்து வர ஒரு கேரண்டி எண்டர்டெய்னர். குடும்பத்தோடு செல்பவர்களுக்கு ஒரு அலர்ட், படத்தில் வரும் சின்ன அடல்ட் கன்டென்ட்காக, 15 வயதுக்கு கீழ் இருப்பவர்களை அழைத்துச்செல்ல வேண்டாம். மற்றபடி ஒரு ஜாலி ரெய்டு இந்த ஓஹோ எந்தன் பேபி.