'முதல் பான் இந்தியா படம் ‘புலி’ தான்.. ஆனா நாங்க அப்படி விளம்பரம் செய்யல' - தயாரிப்பாளர்
விஜய் நடிப்பில் வெளியான புலி படம் தோல்வி அடைந்தது குறித்து பேசியிருக்கும் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார், புலி தான் முதல் பான் இந்தியா திரைப்படம் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ’புலி’. இப்படத்தில் விஜய் உடன் நடிகை ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி ஹாசன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பல திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை தமீன்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் SKT ஸ்டுடியோஸ் முதலியவற்றின் கீழ் ஷிபு தமீன்ஸ் மற்றும் பிடி செல்வகுமார் ஆகியோர் தயாரித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான புலி திரைப்படம், அதற்கு நேரெதிராக மாறி மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. படம் வெளியாகும்வரை அது குழந்தைகளுக்கான திரைப்படம் என்று சொல்லாத படக்குழு, படம் வெளியான பிறகு குழந்தைகளுக்கான படம் என மார்க்கெட்டிங் செய்தது. ஆனாலும் படம் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதால் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் புலி திரைப்படத்தால் தன்னுடைய 27 வருட உழைப்பு சுக்குநூறானாலும் அதுதான் முதல் பான் இந்தியா திரைப்படம் என்றும், அந்த படத்திற்கு பிறகுதான் விஜயின் சம்பளம் உயர்ந்தது என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.
முதல் பான் இந்தியா படம் ’புலி’ தான்..
புலி திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் முன்னாள் PRO-வுமான PT செல்வகுமாருக்கு, 125 படங்களை வெளியிட்டதற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய PT செல்வகுமார், “புலி திரைப்படம் தோல்வியடைந்தாலும் முதல் பான் இந்தியா படம் என்றால் அது ’புலி’ தான். விஜயின் அப்படத்தில்தான் முதல்முறையாக உலகத்தரம் வாய்ந்த கிராஃபிக்ஸை பயன்படுத்தினோம், முதல்முறையாக ஹாலிவுட் சண்டை இயக்குநர்களை கொண்டுவந்தோம், மற்ற மொழி நடிகர்களை முதல்முறையாக அந்த படத்தில் தான் அறிமுகப்படுத்தினோம். ஆனால் பான் இந்தியா படம் என்று நாங்கள் அறிவிக்கவில்லை.
கத்தி, ஜில்லா படங்களுக்கு 60 கோடிக்கு தான் பிசினஸ் இருந்தது, ஆனால் முதல்முறையாக 100 கோடிக்கு பிசினஸ் செய்த விஜய் படம் புலி தான். இந்தியாவிலேயே அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட படமாக புலி இருந்தது.
அதுமட்டுமில்லாமல் விஜயின் சம்பள உயர்வு அந்த படத்தில் இருந்துதான் இரண்டு மடங்கு அதிகமானது. புலி படம் வரை 25 கோடி வாங்கிய அவரை, அடுத்த படத்தில் 45 கோடிக்கு புக் செய்யப்பட்டார்” என்று பேசியுள்ளார்.